rp

Blogging Tips 2017

தாமதமாகும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு


பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பல மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.

உயர்நீதிமன்றத் தடை உத்தரவு காரணமாக 360-க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் இதனால் தமிழக அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் பாதிப்பு ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் பி. இளங்கோவன் கூறியது:

ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையான எண்ணிக்கையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும்.

மே இறுதியிலோ, ஜூன் மாதத்திலோ இந்தப் பதவி உயர்வை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இந்தப் பதவி உயர்வு என்ன காரணத்தாலோ 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளது. இவர்களுக்கு விரைவாக பதவி உயர்வு வழங்குவதன் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள் மூலம் இந்தக் காலியிடங்களை நிரப்பலாம்.

அதேபோல், பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர் நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்குவதில் உயர்நீதிமன்ற தடை உத்தரவு உள்ளதால் 360-க்கும் அதிகமான பணியிடங்கள் இன்னமும் நிரப்பப்படாமலேயே உள்ளன. இந்த தடையை விலக்கி விரைவாக இந்தப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தமிழாசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் உயர் நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்தத் தடை உத்தரவு தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:

பட்டதாரி ஆசிரியர்களின் பி.எட். முடித்த பிறகான பணி அனுபவம், உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என அரசாணை உள்ளது.

அதன்படியே, இந்த ஆண்டு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஆனால், இதை எதிர்த்து தமிழாசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

தமிழாசிரியராவதற்கு பி.எட். முடிக்கத் தேவையில்லை. ஆனால், இந்த முன்னுரிமைப் பட்டியலில் தமிழாசிரியர்கள் பி.எட். முடித்த காலத்திலிருந்து பணி அனுபவம் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. நாங்கள் பணியில் சேர்ந்த காலத்திலிருந்து எங்கள் அனுபவத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரி அவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில்தான் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடையை விலக்கக் கோரி பள்ளிக் கல்வித் துறை மனு செய்துள்ளது. தடை விலக்கப்பட்டதும் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment


web stats

web stats