குடலியக்கம் சீராக இல்லாவிட்டால் ஏற்படும் ஒரு பிரச்சனை தான் மலச்சிக்கல். இத்தகைய மலச்சிக்கலானது குழந்தைகளுக்கு ஏற்பட்டால், அவர்கள் மிகவும் கஷ்டப்படுவதோடு, வயிற்று வலியால் அவஸ்தைப்படுவார்கள். ஆகவே குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோர்களின் கடமை. இத்தகைய மலச்சிக்கல் குழந்தைகளுக்கு உள்ளது என்பதை மலம் கழிக்க திணரும் போது, திடீரென்று உடல் எடை குறைதல் அல்லது அதிகரித்தல், காய்ச்சல், வயிற்று உப்புசம், சரியாக சாப்பிடாமல் இருப்பது போன்றவற்றைக் கொண்டு பெற்றோர்கள் அறியலாம்.
இந்த மலச்சிக்கல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முதன்மையானது உணவுகள் தான். ஆகவே குழந்தைகளுக்கு சரியான உணவுகளைக் கொடுத்து வந்தால், அவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கலாம். இப்போது குழந்தைகள் மலச்சிக்கலால் அவஸ்தைப்படும் போது கொடுக்க வேண்டிய சில உணவுகளை பட்டியலிட்டுள்ளோம். அந்த உணவுகளை கொடுத்து, அவர்களை மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடுங்கள்.
ப்ளம்ஸ்
குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை தடுக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் ப்ளம்ஸ். ஏனெனில் ப்ளம்ஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆகவே மலச்சிக்கலின் போது, குழந்தைகளுக்கு இந்த பழத்தைக் கொடுத்தால், உடனே நிவாரணம் கிடைக்கும்.
நவதானிய பாஸ்தா
நவதானியங்களால் ஆன பாஸ்தாவில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை குழந்தைகளுக்கு கொடுத்தால், இறுகிய மலம் மென்மையாகி எளிதில் வெளியேற்றிவிடும்.
ஓட்ஸ்
ஓட்ஸை குழந்தைகளுக்கு தினமும் காலையில் கொடுத்து வந்தால், அவர்களது குடலியக்கம் சீராக இயங்கி, மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கும்.
தர்பூசணி
தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், இது மலச்சிக்கலில் இருந்து நல்ல நிவாரணம் வழங்கும்.
ஆரஞ்சு
சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த நார்ச்சத்து தண்ணீரை உறிஞ்சி, ஃபேட்டி ஆசிட்டுடன் இணைந்து ஜெல் போன்று உருவாகி, மலத்தை மென்மையாக்கும்.
ஜூஸ்
ஜூஸில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், இது மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வு அளிக்கும். எனவே குழந்தைகளுக்கு காய்கறிகள் மற்றும் பழங்களால் ஆன ஜூஸ்களை அதிகம் கொடுத்து வாருங்கள்.
நெய்
நெய் கூட ஒரு சூப்பரான மருத்துவப் பொருள் தான். அதிலும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் தருவதில் சிறந்தது. எனவே உணவில் நெய்யை அதிகம் சேர்த்து கொடுங்கள்.
ப்ராக்கோலி
ப்ராக்கோலியில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், அது குடலியக்கத்தை சீராக்கி, மலசிக்கலை தடுக்கும்.
பசலைக்கீரை
பசலைக்கீரையில் இரும்புச்சத்து மட்டுமின்றி, நார்ச்சத்துக்களும் அதிகம் உள்ளது. ஆகவே வாரத்திற்கு 2 முறை குழந்தைகளுக்கு கீரையை சமைத்து கொடுத்தால், மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
தண்ணீர்
குழந்தைகளை அதிக தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும். ஏனெனில் தண்ணீர் உடலில் குறைவாக இருந்தாலும், குடலியக்கம் தடைபட்டு, மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும். ஆகவே தண்ணீர் அதிகம் குடிக்க கொடுக்க வேண்டும்.
ஆளி விதை
ஆளி விதை கூட மிகச்சிறந்த மலச்சிக்கல் நிவாரணி. எனவே குழந்தைகள் சாப்பிடும் உணவில் சிறிது ஆளி விதையை தூவி கொடுங்கள் அல்லது ஆளி விதையை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த தண்ணீரை குடிக்க கொடுங்கள்.
தானியங்கள்
தானியங்களை குழந்தைகளின் உணவில் அதிகம் சேர்த்தால், அது குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதோடு, அவர்களுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கும்.
பப்பாளி
மலச்சிக்கல் இருக்கும் குழந்தைகளுக்கு பப்பாளி கொடுத்தால், மலச்சிக்கல் உடனே போய்விடும்.
கேரட்
கேரட் கண்களுக்கு மட்டும் நல்லதல்ல, மலச்சிக்கல் பிரச்சனைக்கும் தான் சிறந்தது. எனவே குழந்தைகளுக்கு தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் கொடுங்கள்.
கைக்குத்தல் அரிசி
கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதிலும் இது எளிதில் செரிமானமாகக்கூடிய நார்ச்சத்து இருப்பதால் இது மலச்சிக்கல் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கொடுக்கும்.
No comments:
Post a Comment