rp

Blogging Tips 2017

அண்ணாமலை பல்கலை நிறுவனருக்கான உரிமைகள் பறிப்பு : புதிய சட்டத்தை எதிர்த்து எம்.ஏ.எம்.ராமசாமி மனு: அரசுக்கு 'நோட்டீஸ்'

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை, அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் வகையில், கொண்டு வரப்பட்ட சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பல்கலைக்கழக இணைவேந்தராக இருந்த எம்.ஏ.எம்.ராமசாமி, மனு தாக்கல் செய்துள்ளார். மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உயர் நீதிமன்றத்தில், எம்.ஏ.எம்.ராமசாமி தாக்கல் செய்த, மனுவில் கூறியிருப்பதாவது: அண்ணாமலை பல்கலைக் கழகம், 1929ல் துவங்கப்பட்டு, 80 ஆண்டுகளாக, இயங்கி வருகிறது. இப்பல்கலைக் கழகத்தில், 49 துறைகளும், 12 விடுதிகளும் உள்ளன. விடுதிகளில், 12,500 மாணவர் தங்கிப் படிக்கின்றனர். 'ரெகுலர்' படிப்பில், 35 ஆயிரம் பேரும், தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தில், நான்­கு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களும் படிக்கின்றனர். என் தாத்தா அண்ணாமலை செட்டியார்,
இந்தப் பல்கலைக் கழகத்தை துவக்க, 300 ஏக்கர் நிலம், 20 லட்சம் ரூபாயை, தானமாக வழங்கினார். 1929ல் கொண்டு வரப்பட்ட, அண்ணாமலை பல்கலைக் கழக சட்டத்தின்படி, அதன் நிறுவனரான அண்ணாமலை செட்டியாரின் குடும்பத்திற்கு, சில உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. எங்கள் குடும்பத்தில் இருந்து,ஆண் ஒருவரை, பல்கலைக் கழக வேந்தர் தேர்ந்தெடுத்து, இணைவேந்தராக நியமிப்பார். இது, ஒரு கவுரவ பதவி. அண்ணாமலை செட்டியார், அவரது குடும்பத்தின் சேவையை அங்கீகரிக்கும் வகையில், கவுரவ பதவியாக, இணைவேந்தர் பதவி வழங்கப்படுகிறது. இப்பதவிக்கு, நிர்வாக ரீதியான பணிகள் எதுவும் கிடையாது.நான், ஒரு தொழிலதிபர். தமிழ் இலக்கியம், கலை மற்றும் அறிவியல் துறைகளின் வளர்ச்சியில், பங்கு கொண்டுள்ளேன். கடந்த ஆண்டு, நவம்பர் மாதம், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு கொள்கை முடிவுகளினால், பல்கலைக் கழகத்துக்கு நிதி சுமை அதிகரித்ததால், பல்கலைக் கழகத்தை நடத்துவதற்கு சிரமம்இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அரசின் நிதியுதவியை பல்கலைக் கழகம் தரப்பில் கோரப்பட்டது. அதன் விளைவாக, உயர் கல்வித் துறை, புதிதாக சட்டத்தை கொண்டு வந்தது. அவ்வப்போது, நன்கொடைகள் மற்றும் பங்களிப்புகள் செய்தும், பல்கலை கழகத்தில் நிதி பிரச்னை ஏற்பட்டது.சட்டப்படி, பல்கலைக் கழக நிர்வாகத்துக்கு, நிறுவனர் பொறுப்பு இல்லை. அரசு நியமித்த, தணிக்கைக் குழு, 272 கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்தது. பல்கலைக் கழகத்தின் நிதிப் பிரச்னைக்கு, என்னை பலிகடா ஆக்கியுள்ளனர். கொள்கை மாற்றங்களினாலும், சம்பளக் கமிஷனின்பரிந்துரைப்படி, ஊதியத்தை அமல்படுத்தியதாலும், பல்கலைக் கழகத்தில் அதிக செலவு ஏற்பட்டது. இதற்காக, என்னை குறைக் கூற முடியாது. தமிழக அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தில், பல்கலைக் கழக நிறுவனருக்கு உள்ள அதிகாரங்கள், உரிமைகள் நீக்கப்பட்டுள்ளன. இது, அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளை மீறுவதாகும். பழைய சட்டத்தை ரத்து செய்வதற்கு, எந்த சூழ்நிலையும் எழவில்லை. எனவே, புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கடந்த 1929ல் கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி, எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளில் குறுக்கிடுவதற்கு, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், நீதிபதி சத்திய நாராயணன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, மத்திய,மாநில அரசுகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, 'முதல்பெஞ்ச்' உத்தரவிட்டது. விசாரணையை, நவ., 11ம் தேதிக்கு, தள்ளி வைத்துள்ளது.

No comments:

Post a Comment


web stats

web stats