ஒரு லட்சம் பொருளியல் பட்டதாரிகளுக்கு வேலையில்லை: டி.இ.டி., தேர்விலும் அனுமதிக்காததால் புலம்பல்
பொருளியல் பட்டம் பெற்ற, ஒரு லட்சம் பட்டதாரிகள், வேலையின்றி தவிக்கின்றனர். டி.இ.டி., தேர்வை எழுதி, பட்டதாரி ஆசிரியர் பணிக்குச் செல்ல வாய்ப்பு இருந்தும், "10ம் வகுப்பு வரை, பொருளியல் பாடம் இல்லை' என, கூறி, அனுமதி மறுத்ததால், எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக, பொருளியல் பட்டதாரிகள், புலம்புகின்றனர்.
6 முதல் 10 வரை: அரசு பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, பொருளியல் பாடம் இல்லை என்பதால், இந்த பாடத்திற்கு, ஆசிரியர் தேர்வு செய்யப்படுவதில்லை என்பது, கல்வித்துறையின் வாதமாக உள்ளது. சமூக அறிவியலில், சிறு பகுதியாக, பொருளியல் இடம் பெற்றுள்ளது. எனினும், இதற்கென, தனியாக ஆசிரியரை நியமனம் செய்ய முடியாது என, கல்வித்துறை கூறி வருகிறது. இதர பாடங்களை படித்த பட்டதாரிகள், ஆசிரியர் பணியில் சேர்ந்து வருவதைக்கண்டு, பொருளியல் பட்டம் பெற்ற பட்டதாரிகள், மனம் வெதும்பி வருகின்றனர். பி.ஏ.,
பொருளியல், பி.எட்., பொருளியல் பட்டம் பெற்று, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொருளியல் பட்டதாரிகள், வேலையில்லாமல், பல ஆண்டுகளாக தவித்து வருகின்றனர்.நடப்பு கல்வியாண்டில்: இது குறித்து, பொருளியல் பட்டதாரிகள் சிலர் கூறியதாவது: "பத்தாம் வகுப்பு வரை, பொருளியல் பாடம் இல்லை' என, அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், நடப்பு கல்வி ஆண்டில், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான பட்டியலில், அரசு பள்ளிகளில் பணிபுரியும் பல பொருளியல் பட்டதாரி ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், 2002, 2009 போன்ற ஆண்டுகளில் தான், பணியில்சேர்ந்துள்ளனர். மேலும், பிற பாடங்களை எடுத்து, பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், விரைவாக பதவி உயர்வு பெற, கூடுதலாக பொருளியல் பட்டம் படித்து, முதுகலை பொருளியல் ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று விடுகின்றனர். இவர்களாலும், எங்களுக்கு, பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. முதுகலை பொருளியல் ஆசிரியர் காலியிடங்களில், பெரும்பாலான இடங்களை, பதவி உயர்வு மூலம், பிற பாடங்களை எடுத்த பட்டதாரி ஆசிரியர்களே ஆக்கிரமித்துவிடுவதால், முதுகலை பொருளியல்இடங்கள் எண்ணிக்கை குறைந்துவிடுகிறது. இதனால், நேரடியாக முதுகலை பொருளியல் ஆசிரியர் பணியிலும் சேர முடியாத நிலை உள்ளது. பட்டதாரி ஆசிரியர் பணியும் கிடையாது; முதுகலை பொருளியல் ஆசிரியர் பணியும் கிடையாது என்றால், பொருளியல் பட்டம் படித்தவர்கள் எங்கே போவது? டி.இ.டி., தேர்விலும், எங்களை அனுமதிக்கவில்லை.
முதல்வர் தலையிட வேண்டும்: இதர பாட பட்டதாரிகள் அனைவரும் விண்ணப்பிக்கும்போது, பொருளியல் பட்டதாரிகள், வேடிக்கைமட்டும் தான் பார்க்க முடிந்தது. பொருளியல் பட்டதாரிகள் பிரச்னை தீர்ப்பதற்கு, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.