2016-17ஆம் கல்வியாண்டில் பி.இ. சேருவதற்கு www.annauniv\tnea2016.edu என்ற இணையதளம் மூலம் ஆன்-லைன் மூலம் விவரங்களைப் பதிவு செய்யும் நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் முதல்முறையாக அறிமுகம் செய்திருக்கிறது. இதன்படி, வெள்ளிக்கிழமை முதல் பதிவு செய்யலாம்.
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதற்குப் பிறகு 7 நாள்கள் வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது. முதல் முறையாக இந்த வசதியை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்படுத்தியுள்ளது. இதனால், விண்ணப்ப விநியோகம் கிடையாது. பிளஸ்-2 மதிப்பெண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான அனைத்து ஆவண நகல்களையும் இணைத்து -"செயலர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை' என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதற்குப் பிறகு 10 நாள்கள் வரை கால அவகாசம் அளிக்கப்படும். தேவைப்பட்டால் இந்த அவகாசம் நீட்டிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதுகுறித்து பதிவாளர் கணேசன் கூறியது: பதிவு செய்யும் முறையில் சந்தேகம் எழும் விண்ணப்பதாரர்களுக்கு உதவும் வகையில், அரசு பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 60 உதவி மையங்கள் செயல்படும். இங்கு சந்தேகங்களை அறிவதோடு, விவரங்களை பதிவையும் செய்து கொள்ள முடியும். இதுதவிர, அரசு இ-சேவை மையங்கள் மூலம் விவரங்களைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.