பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், மார்ச், 14ல் துவங்க உள்ளது. சிறப்பு குறியீடு கள் இருந்தால், அந்த விடைத்தாள்களை தனியாக பிரித்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 4ல் துவங்கியது. தமிழ் பாடத்துக்கான, இரண்டு தாள்களுக்கு தேர்வு முடிந்துள்ளது. இன்றும், நாளையும், ஆங்கில பாட தேர்வுகள் நடக்கின்றன.
அரசு உத்தரவு:மார்ச், 14 முதல் முக்கிய பாடங்களுக்கு தேர்வுகள் துவங்குகின்றன. சட்டசபை தேர்தல் வருவதால், தேர்வு பணிகளை விரைந்து முடிக்க, தேர்வுத்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேர்வு நடக்கும் போதே, விடைத்தாள் திருத்த பணிகள் நடக்க உள்ளன. தமிழ் பாட விடைத்தாள்களை, தேர்வு மையம் வாரியாக தொகுத்து அவற்றை விடைத்தாள் திருத்தும் மையத்தில் பிரித்து வைக்கும் பணி நடந்து வருகிறது.
கண்காணிப்பு:மார்ச், 14 முதல் விடைத்தாள் திருத்த பணி துவங்குகிறது. முதல், இரண்டு நாட்களுக்கு, தலைமை விடை திருத்துனர் மற்றும் விடை திருத்தும் மைய கண்காணிப்பு அதிகாரிகள், விடைத்தாள்களை கலக்கி, பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களின் அடையாளம் தெரியாத வகையில், விடைத்தாள்களை பிரிக்க உள்ளனர்.
அதன்பின், அவை, விடை திருத்தும் மையங்களுக்கு அனுப்பப்படும். மார்ச், 16 முதல், விடை திருத்துனர்களின் பணி துவங்கும். இதற்காக, மாவட்ட மையங்களுக்கு தேர்வுத்துறை மூலம் விடை குறிப்புகள் அனுப்பப்படும். 'விடை திருத்தத்தில், எந்த முறைகேடுக்கும் இடம் அளிக்கக் கூடாது' என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.