தமிழகத்தில் வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்து 2 லட்சத்து 60 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகள் காத்திருக்கின்றனர்.
அதேபோல், 47 ஆயிரத்து 736 முதுநிலைப் பொறியியல் பட்டதாரிகளும் வேலைவாய்ப்புக்காக பதிவுசெய்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக வேலைவாய்ப்புத் துறை கடந்த மார்ச் 31 வரை வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளவர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் பொறியியல் பட்டதாரிகள் கணிசமானோர் வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்துள்ள தகவல் வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 530-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான பட்டதாரிகள் படிப்பை முடித்து வெளியே வருகின்றனர்.
பல லட்சம் பேர் வேலையில்லாமல் இருந்தாலும் தமிழகத்தில் பொறியியல் துறைக்கான மோகம் குறையவில்லை. இந்த ஆண்டும் 1.30 லட்சத்துக்கும் அதிகமானோர் பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.
பொறியியல் பட்டதாரிகள் அதிகம் பேர் வேலையில்லாமல் இருப்பது உண்மைதான். ஆனால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள பலரும் தங்கள் படிப்புக்கேற்ற வேலையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு வேலையிலோ இருக்கலாம் என அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
அரசுக் கல்லூரிகளில் விரிவுரையாளராகப் பணியாற்றுவதற்காகவே அதிகமானோர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்வார்கள். ஆனால், இவர்களில் பலரும் தனியார் பொறியியல் கல்லூரிகளிலும் பணியாற்றி வருகிறார்கள் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
பொறியியல் டிப்ளமோ முடித்த 1 லட்சத்து 59 ஆயிரத்து 481 பேர் வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்து காத்திருக்கின்றனர். பொறியியல் தவிர இதர டிப்ளமோ முடித்த 1 லட்சத்து 34 ஆயிரம் பேர் வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கின்றனர்.
9 ஆயிரம் மருத்துவப் பட்டதாரிகள்: மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளை முடித்த 9 ஆயிரத்து 427 பேர் வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்துள்ளனர். கால்நடை மருத்துவம் படித்த 1,726 பேரும் வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்துள்ளனர்.
விவசாயப் பட்டதாரிகள் 8 ஆயிரம் பேரும், சட்டப் பட்டதாரிகள் 2,876 பேரும் வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்துள்ளனர்.
7.5 லட்சம் ஆசிரியர்கள் காத்திருப்பு: பட்டதாரி ஆசிரியர்கள் 4 லட்சத்து 8 ஆயிரத்து 326 பேரும், இடைநிலை ஆசிரியர்கள் 2 லட்சத்து 3 ஆயிரத்து 443 பேரும் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 1 லட்சத்து 53 ஆயிரம் பேர் தமிழகத்தில் பதிவு செய்துள்ளனர்.
பி.எஸ்சி. முடித்த இளநிலை அறிவியல் பட்டதாரிகள் மிக அதிக அளவாக 4 லட்சத்து 72 ஆயிரம் பேரும், பி.ஏ. உள்ளிட்ட கலைப் பட்டப் படிப்புகளை முடித்த 3 லட்சத்து 76 ஆயிரம் பேரும், வணிகவியல் முடித்த 2 லட்சத்து 52 ஆயிரம் பேரும் வேலையில்லாமல் உள்ளனர். இவற்றில் பட்ட மேற்படிப்பு முடித்தவர்களில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு முடிக்காதவர்கள் 5 லட்சத்து 96 ஆயிரம் பேரும், பத்தாம் வகுப்பு முடித்த 24 லட்சம் பேரும், பிளஸ் 2 முடித்த 22 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர்.
பெண்களே அதிகம்: தமிழக அரசு வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்துள்ளவர்களில் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. பதிவு செய்த 82 லட்சத்து 78 ஆயிரத்து 618 பேரில் 41 லட்சத்து 53 ஆயிரம் பேர் பெண்கள். 41 லட்சத்து 25 ஆயிரம் பேர் ஆண்கள்.
மொத்தம் 82 லட்சம் பேரில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 793 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.
வகுப்பு வாரியாக... தாழ்த்தப்பட்டவர்களில் 1 லட்சத்து 87 ஆயிரம் பேரும், அருந்ததியினத்தவர்களில் 1 லட்சத்து 48 ஆயிரம் பேரும், பழங்குடியினத்தவர்களில் 38 ஆயிரத்து 918 பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் 1 லட்சத்து 82 ஆயிரம் பேரும், பிற்படுத்தப்பட்டோரில் 33 லட்சம் பேரும், முற்பட்ட வகுப்பினரில் 6 லட்சம் பேரும் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.
No comments:
Post a Comment