ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் பிளஸ் டூ சின்ட்ரோம் என்றொரு நோய் ஆட்டிப்படைத்துவருகிறது. எந்த ஊரில், எந்தப் பள்ளியில் படித்தாலும் பள்ளி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களின் முகம் ஒன்றுபோல இறுகிப்போயிருக்கிறது. பிராய்லர் கோழிகளை வளர்ப்பதுபோல மாணவர்கள் இரவு, பகலாகப் படிக்க வற்புறுத்தப்படுகிறார்கள். அவர்கள் இயல்பாகச் சாப்பிடுவதில்லை, உறங்குவதில்லை, வீட்டாருடன் பேசுவதில்லை, சிரிப்பதில்லை. தீவிரமான மனச்சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இதன் விளைவு, மனச்சிதைவும் மீள முடியாத போதைப் பழக்கமும் தற்கொலைகளும் என்பதைப் பல்வேறு நாளிதழ் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
இதுபற்றி ஒரு கல்வி அதிகாரியிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார், “சென்ற ஆண்டு தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் சேர்ந்து எட்டரை லட்சம் மாணவர்கள் பிளஸ் டூ பரீட்சை எழுதினார்கள். இவர்களில் ஒன்றரை லட்சம் முதல் இரண்டு லட்சம் பேர் நீங்கள் சொல்லும் பிளஸ் டூ சின்ட்ரோம் கொண்டவர்கள். மாணவர்கள் இப்படி நடந்துகொள்ளக் காரணம், எப்படியாவது மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரியில் பணம் கொடுக்காமல் இடம் வாங்கிவிட வேண்டும் என்ற வெறி. இவர்கள் தனியார் பள்ளிகளில், டியூஷன்களில் இரண்டு லட்சம் வரை பணம் கட்டிப் படிக்கிறார்கள். இவர்கள் மண்டைக்குள் பாடத்தை எப்படியாவது திணித்து மதிப்பெண் வாங்க வைத்துவிடுகின்றன தனியார் பள்ளிகள். அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற சிறப்பு வகுப்புகள், நெருக்கடிகள் கிடையாது.
ஆனால், இதற்கு மறுபக்கம் ஒன்றும் இருக்கிறது. தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் பேருக்கு மேல் பள்ளி இறுதியாண்டு வந்தபோதும் அடிப்படைப் பாடங்களைக்கூடக் கற்காதவர்கள், அடுத்து என்ன படிக்கப்போகிறோம் என்று தெரியாதவர்கள், அறிவியல் சாதனங்கள் அதிகம் இல்லாத பள்ளியில் பயின்றவர்கள், புறக்கணிக்கப்பட்ட, கைவிடப்பட்ட மாணவர்கள். ஆகவே, நகர்ப்புற மாணவர்களை மட்டுமே மனதில் கொண்டு எதையும் மதிப்பிடாதீர்கள். இன்றுள்ள சூழலில் சிறுநகரம் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிர்காலப் படிப்பு என்பது எட்டாக் கனி. மருத்துவம், பொறியியல், உயர் தொழில்நுட்பம் தவிர்த்து, மற்ற கலை அறிவியல் படிப்புகள் படித்தால் சரியான வேலை கிடைக்காது. வாழ்க்கையில் முன்னேற முடியாது என்ற சூழ்நிலையை ஏற்படுத்தியது அரசின் குற்றம். லட்சலட்சமாகப் பணம் கொடுத்தால் மட்டுமே நல்ல கல்வி கிடைக்கும் என்பது தவறான முன்னுதாரணம்’’ என்றார்.
உண்மைதான். பெட்ரோல் பங்குகளில் வாகனத்தின் மூடியைத் திறந்து குழாயைச் சொருகிக் கடகடவென பெட்ரோல் ஊற்றுவதைப் போல மாணவன் தலைக்குள் பாடங்களைக் கொட்டிவிடப்பார்க்கிறார்கள் ஆசிரியர்கள். மனப்பாடம் செய்யும் மாணவனே இங்கே அறிவாளி.
உயர் கல்வி பயில்வதற்கு ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம் என்று அரசு நிறுவனங்களைக் குறிவைக்கும் நாம் ஆரம்பக் கல்விக்கு மட்டும் ஏன் தனியார் பள்ளிகளைத் தேர்வுசெய்கிறோம்?
பெரும்பான்மை பெற்றோர் இதற்குச் சொல்லும் காரணம், தனியார் பள்ளிகள் மாணவர்களை எப்படியாவது மதிப்பெண்கள் வாங்க வைத்துவிடும். அங்கே கண்டிப்பும் கட்டுப்பாடுகளும் மிகுதி.
அரசுப் பள்ளிகளின் மீது இந்த நம்பிக்கை ஏன் வர மறுக்கிறது? இவ்வளவுக்கும் பல அரசுப் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள். நல்லாசிரியர் பலர் அரசுப் பள்ளிகளில் பணியாற்றுகிறார்கள். என்றாலும், அரசுப் பள்ளி என்றாலே, பொதுப்புத்தியில் அது தரமற்ற கல்வி என்ற எண்ணமே இருக்கிறது. இது மாற்றப்பட வேண்டும்.
அதற்காக எல்லா அரசுப் பள்ளிகளும் வெகு அற்புதமாகச் செயல்படுகின்றன என்று அர்த்தமில்லை. அரசுப் பள்ளிகளில் நிறைய பிரச்சினைகள், சிக்கல்கள் இருக்கின்றன. அதன் ஆசிரியர்களில் பலர் அதைச் சம்பளம் தரும் ஒரு வேலை என்று மட்டுமே நினைக்கிறார்கள். மாணவர் நலனில் அக்கறை காட்டுவதில்லை.
கிராமப்புற அரசுப் பள்ளிகளில் போதுமான வகுப்பறைகள், அடிப்படை வசதிகள் இல்லை. ஆசிரியர்களின், தேர்ந்த கற்றுத்தருதலும் தொடர்ந்த ஊக்கப்படுத்துதலும் குறைவாக உள்ளன. இதுபோன்ற சூழலைத் தங்களுக்குச் சாதகமாகக்கொண்டு, தனியார் பள்ளிகள் கல்வியை மிகப் பெரிய சந்தை வணிகமாக மாற்றிவிட்டிருக்கின்றன.
பிள்ளைகளைப் பள்ளியில் சேர்த்துவிட்டதோடு தனது கடமை முடிந்துவிட்டதாகப் பெற்றோர்கள் நினைக்கிறார்கள். இது மோசமான மனநிலை. இன்னொரு பக்கம் பெற்றோர்களைப் பள்ளிவளாகத்தில் எதையும் கேட்க நிர்வாகம் அனுமதிப்பதில்லை. இரண்டுக்கும் நடுவில் சிக்கித் தடுமாறுகிறார்கள் மாணவர்கள். அரசுப் பள்ளிகளில் மாணவர்களும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களும் சொல்ல முடியாத நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதே நிஜம்.
பணம் இருந்தால் மட்டுமே தரமான கல்வி, மேற்படிப்பு. இல்லாதவர்கள் எப்படியோ போகட்டும் என ஒதுக்கிவிடுவது மாபெரும் சமூக அநீதி. இந்தப் பிரச்சினையின் புறவடிவம்தான் பிளஸ் டூ மாணவர்களின் நெருக்கடி நிலை.
இது ஏதோ தமிழ்நாட்டில் மட்டும் நடக்கும் அவலம் இல்லை. உலகெங்கும் கல்விதான் இன்று முக்கிய வணிகப் பொருள். இந்தச் சந்தை பெற்றோர்களை மூச்சுமுட்டச் செய்கிறது. ஆசிரியர்கள் முதுகில் பணிச்சுமையை ஏற்றி அவர்களை ஒடுக்குகிறது. மாணவர்களைச் சிறைக் கைதிகளைப் போல நடத்துகிறது. கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள இந்த இழிநிலையை மாற்ற வேண்டியது அரசின் கடமை மட்டுமில்லை. நம் அனைவரின் பொறுப்புணர்வும் அக்கறையும் என்றே சொல்வேன்!
எஸ். ராமகிருஷ்ணன், எழுத்தாளர், தொடர்புக்கு: [email protected]
No comments:
Post a Comment