தமிழகத்தில், 10 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட சொத்து விற்பனை விபரங்களை, வரும், 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என்ற, வருமான வரித்துறை கெடுபிடியால், சார் - பதிவாளர்கள் திணறுகின்றனர்
. தமிழகத்தில், அசையா சொத்துகள் விற்பனை தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய, 568 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்கள் வாயிலாக, ஆண்டுக்கு, 25 லட்சம் பத்திரங்கள் பதிவாகின்றன. இவற்றில், 10 லட்சம் ரூபாய்க்கு மேலான, சொத்து பத்திரங்களின் விபரங்களை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, வருமான வரித்துறைக்கு, பதிவுத்துறை தெரிவிக்க வேண்டும்.
இதன்படி, 2017 - 18ல், இரண்டாம் அரையாண்டில் பதிவான பத்திரங்களின் விபரங்களை, வரும், 31ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி, பதிவுத்துறைக்கு, வருமான வரித்துறை, 'கெடு' விதித்துள்ளது.
இது குறித்து, சார் - பதிவாளர்கள் கூறியதாவது: சார் - பதிவாளர்கள் தங்களின் தனிப்பட்ட, 'பான்' எண்ணை பயன்படுத்தி, வருமான வரித்துறை இணையதளத்தில், இத்தகவல்களை பதிவிட வேண்டியுள்ளது. அப்படி பதிவிட்டாலும், அதிலுள்ள சாப்ட்வேரின் தேவைக்கு ஏற்ப, தகவல்களை உள்ளீடு செய்ய முடியவில்லை.வருமான வரித்துறையின், 'கெடு' முடியவுள்ள நிலையில், சார் - பதிவாளர்கள், பத்திரப்பதிவு விபரங்களை தாக்கல் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். கெடுவுக்குள் பதிவு செய்யாவிட்டால், சார் - பதிவாளர்கள், தினமும், 1,000 ரூபாய் அபராதம் செலுத்தும் நிலை ஏற்படும். இதில், வருமான வரித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment