rp

Blogging Tips 2017

இவர்களும் ஆசிரியர்கள்தானா.. தமிழக கல்வித்துறையின் களங்கமாக மாறி நிற்கும் பூம்புகார் ஆசிரியர்கள்!

நாகப்பட்டனம்: தங்களது பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற தனியார் பள்ளிகள்தான் இல்லாத அட்டகாசம் செய்கிறார்கள் என்றால், ஏழை பாழைகள் படிக்கும் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் செய்த அட்டகாசம் அனைவரையும் அதிரவைத்துள்ளது. நாகப்பட்டனம் மாவட்டம் பூம்புகார் அருகேயுள்ள கீழப்பெரும்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் இந்த அநியாயம் நடந்துள்ளது. அங்கு 10-ம் வகுப்பு படித்து வந்த 6 மாணவ, மாணவியர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. காரணம், தங்களது பள்ளி பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என்ற அல்ப காரணத்தால்
, இவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியை உள்பட மூன்று பேர் தேர்வு எழுத அனுமதிக்காமல் தடுத்துள்ளனர். இந்த அக்கிரமக்கார ஆசிரியர்களால் பாதிக்கப்பட்ட மாணவிகள் - சாந்தி, ரேணுகா, காயத்ரி, தமிழ்ச்செல்வி மற்றும் 2 மாணவர்கள். இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், 'எங்களுக்குத் தேர்வு ஆரம்பிக்கிற முதல்நாள் வரை ஹால் டிக்கெட் கொடுக்கலை. ஏன் என்று கேட்டால் நீங்க எல்லாம் சரியா படிக்கலை. எக்ஸாம் எழுதினால் ஃபெயில் ஆகிடுவீங்கன்னு ஹெட் மிஸ் சொல்லிட்டாங்க. அதனால தமிழ் முதல்தாள் எக்ஸாம் எழுதல. பரீட்சை எழுத போகலையான்னு வீட்டில கேட்டாங்க. ஃபெயில் ஆகிடுவோம்னு சொல்லி பரீட்சைக்கு வரவேண்டாம்னு டீச்சர் சொல்லிட்டாங்கன்னு சொன்னோம். எங்களோட அப்பாவும் அம்மாவும் போய் போலீஸ்ல புகார் கொடுத்தாங்க. பிறகு, டி.இ.ஓவுக்கு போன் பண்ணி பேசினாங்க. ஸ்கூலுக்கு வந்து ஆய்வு செஞ்ச டி.இ.ஓ., தமிழ் இரண்டாம் தாள் பரீட்சை எழுதச் சொன்னாங்க. 2 மாசத்துக்கு முன்பு நடந்த பிராக்டிகல் எக்ஸாம்கூட எழுத அனுமதிக்கலை. எல்லோர்கிட்டேயும் சொன்னோம். யாருமே கண்டுக்கலை' என்றனர் கண்ணீர் மல்க. இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், கடந்த 4 மாதங்களாக வருகைப் பதிவேட்டில் இந்த 6 பிள்ளைங்க பெயர்களைக் கூப்பிடுவதே இல்லை. சாப்பாட்டு ரூமில் வெச்சுதான் பாடம் சொல்லிக் கொடுத்திருக்காங்க. பெற்றோர் ஆசிரியர் மீட்டிங்கில் நாங்கள் கலந்துகொண்டது மாதிரி அவர்களே கையெழுத்து போட்டிருக்கிறாங்க. எங்க பிள்ளைங்க எல்லோரும் நல்லாத்தான் படிச்சாங்க. பரீட்சை எழுதவிடாததற்கு என்ன காரணம்னு தெரியல என்றனர் வேதனையுடன். இதுகுறித்து அந்தப் பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டால், அந்த ஆறு பேருக்கும் சுத்தமா படிக்க வராது. அதனால பரீட்சை எழுதவிடலைன்னு நினைக்கிறோம். மாணவர்கள் படிக்கவில்லை. பரீட்சை எழுதினால் ஃபெயில் ஆகிவிடுவார்கள் என்பதற்காகப் பரீட்சை எழுதவிடாமல் செய்தது தவறுதான். 100 சதவிகிதம் தேர்ச்சி வேண்டும் என்று அதிகாரிகள் பிரஷர் கொடுக்கிறார்கள். ஒன்பதாம் வகுப்புவரை ஆல் பாஸ் போடச் சொல்கிறார்கள். மாணவர்களை அடிக்கவும் முடியலை. கண்டிக்கவும் முடியலை. இப்படி இருந்தால் எப்படி 100 சதவிகிதம் கொடுக்க முடியும். மாணவர்களிடம் அன்பு காட்டினால் சந்தோஷப்படுகிறார்கள். கண்டித்தால், அவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் ஆசிரியர்களைப் பற்றித் தவறாகச் சொல்லி திசை திருப்பிவிடுகிறார்கள் என்று அவர்களது தரப்பு வாதத்தை வைக்கிறா்கள். இந்த விவகாரம் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணியோ, இதுகுறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்று கையை விரித்துள்ளார். பள்ளிக்கல்வித் துறை செயலாளர் சபீதாவோ 'மாணவர்கள் எதற்காகத் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை என்பது பற்றி கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். விசாரணை முடிந்த பிறகுதான் என்னவென்று தெரியவரும் என்கிறார். என்ன மாதிரியான சமூகம் இது.. அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் சமூகத்தில் மிகவும் பின் தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்களை அரசே இப்படி அலட்சியம் செய்தால் எப்படி... என்ன மாதிரியான நியாயம் இது....?

No comments:

Post a Comment


web stats

web stats