rp

Blogging Tips 2017

வாட்ஸ் அப்பில் கேள்வித்தாள் வெளியான விவகாரம் பள்ளி நிர்வாகம் நெருக்கடியால் விடைகள் தயார் செய்தோம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிளஸ்&2 தேர்வில் வாட்ஸ் அப்பில் கேள்வித்தாள் வெளியிட்ட சம்பவத்தில் ஸ்ரீவிஜய் வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் 4 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வாட்ஸ் அப்பில் அனுப்பிய கேள்வித்தாளுக்கு விடைகளை தயாரித்ததாக அதே பள்ளியின் பிளஸ்&2 கணக்கு ஆசிரியர்கள் சஞ்சீவ்குமார், விமல்ராஜ், மைக்கேல்ராஜ், கவிதா ஆகிய 4 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைதுசெய்தனர்.
அவர்களிடமிருந்து 4 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். விடிய, விடிய விசாரணை நடத்தியதில் அவர்கள், பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டதால், வாட்ஸ் அப்பில் வந்த கேள்வித்தாளுக்கு விடைகளை எழுதி கொடுத்தோம். இந்த ஆண்டு மாநில அளவில் முதலிடம் பிடித்தே ஆக வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். எது வந்தாலும் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என நிர்வாகத்தினர் நெருக்கடி கொடுத்ததால்தான் இதை செய்தோம் என கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
.
கைதான ஆசிரியர்கள் போலீசில் கதறல்
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இரண்டாவதாக கைது செய்யப்பட்ட 4 பேரின் செல்போன் வாட்ஸ் அப்பில் இருந்து விடைகள் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் சென்றிருக்க வாய்ப்புள்ளது. எனவே ஓசூர் மட்டுமின்றி, கிருஷ்ணகிரி, தர்மபுரியில் செயல்படும் விஜய் வித்யாலயா பள்ளியில் கணக்கு தேர்வு பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தவர்கள் குறித்த விவரங்களையும் சேகரித்து விசாரணை நடத்தவேண்டியுள்ளது,“ என்றார். கைது செய்யப்பட்ட 4 ஆசிரியர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை ஆய்வு செய்தபின், யாருக்கு பதில்களை அனுப்பியுள்ளனர் என்ற விவரம் தெரியவரும். இதில் அரசு பள்ளி ஆசிரியர்களும் சிக்க வாய்ப்புள்ளதால் அவர்களும் கலக்கமடைந்துள்ளனர்.
விசாரணைக்கு பின்னர் 4 ஆசிரியர்களும் நேற்று ஓசூர் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 4 பேரையும் வரும் 9ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் வைக்க மாஜிஸ்திரேட் சுரேஷ்குமார் உத்தரவிட்டார். ஆசிரியை கவிதா கிருஷ்ணகிரி பெண்கள் சிறையிலும், மற்ற 3 பேரும் சேலம் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
உறவினர்கள் குமுறல்:
கைது செய்யப்பட்ட விமல்ராஜ், சஞ்சீவ்குமார் உறவினர்கள் கூறுகையில், மாநில அளவில் ரேங்க் வாங்கும் பள்ளியில் வேலை கிடைத்ததால் ஆரம்பத்தில் சந்தோஷமாக இருந்தனர். பள்ளியில் நல்ல வசதி எல்லாம் செய்து கொடுத்தனர். ஆனால் சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொண்டனர். வேறு வழியில்லாமல் அவர்கள் கூறியபடி செய்து, தற்போது பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டனர். மொத்தத்தில் பள்ளி நிர்வாகத்தின் மிரட்டலால் தான் தற்போது இவர்கள் சிக்கிக்கொண்டனர். தற்போது இவர்களது எதிர்காலம் தான் கேள்விக்குறியாகியுள்ளது என குமுறலுடன் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment


web stats

web stats