rp

Blogging Tips 2017

ஆர்.டி.இ., சேர்க்கையை இரட்டிப்பாக உயர்த்த திட்டம்

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்ட (ஆர்.டி.இ.,) ஒதுக்கீட்டின் கீழ், நடப்பு கல்வியாண்டில், 19 ஆயிரம் மாணவர், தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கையை, வரும் கல்வி ஆண்டில், இரட்டிப்பாக உயர்த்த இலக்கு நிர்ணயித்து, பள்ளிகல்வித் துறை, திட்டம் தீட்டியுள்ளது.
அதன்படி, வரும் டிசம்பர் மாதமே, ஆர்.டி.இ., இட ஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வு பிரசாரம், மாநிலம் முழுவதும், துவங்குகிறது. ஏழைகளுக்கு 25 சதவீதம்: ஆர்.டி.இ., சட்டத்தின்படி, சிறுபான்மை அல்லாத இதர தனியார் பள்ளிகளில், ஆரம்ப நிலையில் உள்ள எல்.கே.ஜி., மற்றும் ஆறாம் வகுப்புகளில் உள்ள மொத்த இடங்களில், 25 சதவீத இடங்களை, ஏழை, எளிய, சமுதாயத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

அதன்படி, தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள், 56,682 இடங்களை நிரப்ப வேண்டும். ஆனால், நடப்பு கல்வி ஆண்டில், 19 ஆயிரம் மாணவர் மட்டுமே, இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்துள்ளனர். ஒரு தரப்பு பெற்றோருக்கு, ஆர்.டி.இ., குறித்து தெரிந்தும், குழந்தைகளை சேர்க்க தயங்குகின்றனர். குழந்தைகளை சேர்க்க நினைக்கும் மற்றொரு தரப்பு பெற்றோருக்கு, ஆர்.டி.இ., குறித்த விழிப்புணர்வு இல்லை.
ஆர்.டி.இ., இட ஒதுக்கீட்டின் கீழ், எந்த ஒரு தனியார் பள்ளியிலும், ஏழை குழந்தைகளை சேர்க்கலாம். அதற்கான கல்விச் செலவு முழுவதையும், அரசே ஏற்கிறது. எனவே, "வரும், 2014-15ம் கல்வி ஆண்டில், குறைந்தது, 40 ஆயிரம் குழந்தைகளை, ஆர்.டி.இ., இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்க வேண்டும்" என, பள்ளிகல்வித்துறை, இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதற்காக, இரு முக்கிய அம்சங்களை, கல்வித் துறை செயல்படுத்த உள்ளது. ஒன்று, விண்ணப்ப வினியோக முறையை, மாற்ற உள்ளது. பள்ளிகளிலேயே, ஆர்.டி.இ., விண்ணப் பங்களை வழங்க வேண்டும் என்ற உத்தரவை, பெரிய தனியார் பள்ளிகள், சரியாக கடைப் பிடிக்கவில்லை. விண்ணப்பம் வழங்குவதை, இருட்டடிப்பு செய்தன.
இதனால், கடைசி நேரத்தில், முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலமாக விண்ணப்பிக்கும் நடவடிக்கையை, கல்வித் துறை எடுத்தது. இது தான், ஓரளவுக்கு கை கொடுத்துள்ளது. இதன் மூலமாகத் தான், 12 ஆயிரம் பேர் சேர்ந்தனர். இந்த நடைமுறையை, வரும் கல்வி ஆண்டில், முழுமையான அளவில் அமல்படுத்த, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தனியார் பள்ளிகளிடம் சென்று, விண்ணப்பங்களுக்காக காத்திருக்காமல், சி.இ.ஓ., அலுவலகங்களில், நேரடியாக சென்று விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து கொடுக்கலாம். இதன்மூலம், அதிகளவு பெற்றோர் விண்ணப்பிப்பர் என, கல்வித் துறை எதிர்பார்க்கிறது.
இரண்டாவதாக, வரும் டிசம்பர் மாதத்தில் இருந்தே, பெற்றோரிடம் விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்குவதற்கும், கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. வரும் ஆண்டில், 40 ஆயிரம் மாணவர், கண்டிப்பாக சேர்வர் என, உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment


web stats

web stats