திருவாரூர் அரசு போக்குவரத்து கழகத்தில் அலுவலக உதவியாளராக வெங்கன் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி முதல் மனைவி இருக்கும்போதே, அவருக்கு தெரியாமல் 2–ம் திருமணம் செய்துகொண்டார். அதுபற்றி தெரிய வந்ததும், துறை அதிகாரியிடம் முதல் மனைவி புகார் கொடுத்தார். புகாரின் முகாந்திரம் இருந்ததைத் தொடர்ந்து, நன்னடத்தை விதிகளின்படி, வெங்கனுக்கு போக்குவரத்துத்துறை செயலாளர் கட்டாய ஓய்வு அளித்து உத்தாவிட்டார்.
இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வெங்கன் வழக்கு தாக்கல் செய்தார். முதல் மனைவியின் சம்மதத்தோடுதான் 2–ம் திருமணம் செய்ததாகவும், அதை பதிவு செய்யவில்லை என்றும் அவர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் புகாரை முதல் மனைவி திரும்ப பெற்றதால், கட்டாய ஓய்வு அளிக்கக்கூடாது என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேணுகோபால் அளித்த தீர்ப்பு வருமாறு:–
கணவனின் இரண்டாவது திருமணத்துக்கு எந்த மனைவியும் சம்மதிக்க மாட்டார். வேறு ஒரு பெண்ணுக்கு தனது இடத்தை விட்டுக்கொடுக்க மாட்டார். இந்து தர்மம் இதுதான்.
முதல் மனைவி இருக்கும்போது, அரசு துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றொருவருடன் குடும்பம் நடத்துவது இந்து திருமண சட்டத்தின்கீழ் தண்டனைக்குரிய குற்றம். புகாரை முதல் மனைவி திரும்ப பெற்றுவிட்டதால் அந்த குற்றத்துக்கான தண்டனையை மாற்ற முடியாது.
மனுதாரரின் செயல், நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது. எனவே அவருக்கு போக்குவரத்து துறை செயலாளர் கட்டாய ஓய்வு வழங்கிய உத்தரவு செல்லும். மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது,
No comments:
Post a Comment