Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி 21ல் தொடக்கம்

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 21ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பிளஸ் 2 தேர்வுகள் கடந்த 3ம் தேதி தொடங்கியது. வரும் 25ம் தேதி முடிகிறது. 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவ மாணவியர் எழுதுகின்றனர். மருத்துவம், பொறியியல் படிப்புக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளும் அறிவியல் மற்றும் கணக்கு பாடங்களின் தேர்வுகள் 20ம் தேதியுடன் முடிகின்றன. எனவே விடைத்தாள் திருத்தும் பணியை 21ம் தேதியில் இருந்து தொடங்க தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 67 திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 4 மையங்களில் திருத்துகின்றனர். 21 மற்றும் 22ம் தேதிகளில் தலைமை தேர்வாளர்கள், தனி அலுவலர்கள் மொழிப்பாடத் தேர்வு விடைத்தாள்களை திருத்த தொடங்குகின்றனர். அதைத் தொடர்ந்து உதவி தேர்வாளர்கள் 24ம் தேதி திருத்துகின்றனர்.


மற்ற பாடங்களை பொருத்தவரை முதன்மை தேர்வாளர்கள், தனி அலுவலர்கள் 28, 29ம் தேதிகளில் திருத்துகின்றனர். உதவி தேர்வாளர்கள் 31ம் தேதி திருத்துகின்றனர். விடைத்தாள் திருத்தும் பணியை ஏப்ரல் 9ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொழிப்பாடங்களில் தலா இரண்டு தாள்கள் உள்ளதால் அதன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதனால் அந்த தாள்களை திருத்த கூடுதல் நாட்கள் ஆகும். மற்ற பாடங்களுக்கான விடைத்தாள்கள் 5 நாட்களில் திருத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். பின்னர் மதிப்பெண் பட்டியல் தயாரித்தல், தேர்வு முடிவு வெளியிடத் தேவையான பட்டியல் தயாரிக்க 20 நாட்கள் ஆகும். அதற்கு பிறகு மே இரண்டாவது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment


web stats

web stats