Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஓட்டுப்பதிவுக்கு கூடுதலாக 2 மணி நேரம், தேர்தல் கமிஷன் முடிவு: காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை ஓட்டுப்பதிவு


ஓட்டுப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
ஆலோசனை
பாராளுமன்ற தேர்தல், அடுத்த மாதம் 7–ந்தேதி தொடங்கி, மே 12–ந்தேதிவரை 9 கட்டங்களாக நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை மொத்தம் 9 மணி நேரம் ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், ஓட்டுப்பதிவு நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்தனர்.
இதுபற்றி தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத், தேர்தல் கமிஷனர்கள் பிரம்மா, நசீம் சைதி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
நேரம் அதிகரிப்பு
இந்நிலையில், ஓட்டுப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அதாவது, காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி, மாலை 6 மணிவரை நடைபெறும். எனவே, 11 மணி நேரம், ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
ஆனால், மாவோயிஸ்டுகள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில், காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 4 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவடைந்து விடும். அதாவது, 9 மணி நேரம்தான், அந்த பகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறும்.
இத்தகவல்களை தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.
அசாமில் முகாமிட்டுள்ள தேர்தல் கமிஷனர்கள் டெல்லிக்கு திரும்பி வந்த பிறகு, இந்த முடிவுக்கு இறுதி ஒப்புதல் அளிப்பார்கள். அதன்பின்னர், இம்முடிவு, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.
காரணம் என்ன?
கடந்த பாராளுமன்ற தேர்தலை விட, தற்போது கூடுதலாக 10 கோடி புதிய வாக்காளர்கள் சேர்ந்துள்ளனர். சமீபகாலமாக, தேர்தல்களில் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்து வருகிறது. ஓட்டுப்பதிவு முடிவடையும் நேரத்தில், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நிற்பதை காண முடிகிறது.
மேலும், இந்த தேர்தல், நல்ல வெயில் காலத்தில் நடைபெறுவதால், வாக்காளர்கள் மாலை நேரத்தில் வெயில் தணிந்த பிறகே வாக்களிக்க வர வாய்ப்புள்ளது.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுதான், ஓட்டுப்பதிவு நேரத்தை அதிகரிக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment


web stats

web stats