குரூப் 2 எழுத்துத் தேர்வு மதிப்பெண் விவரங்களை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் நான்கு வாரத்துக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏ.கோபிகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.
மனுவில் கோபிகிருஷ்ணன் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) 2012 நவம்பர் 4-ஆம் தேதி குரூப் 2 எழுத்துத் தேர்வை நடத்தியது. இதற்கான விடைகளை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் இணையதளத்தில் வெளியிட்டது. இதில், 300-க்கு 210 மதிப்பெண்கள் எனக்குக் கிடைத்தது.
என்னை விடக் குறைவான மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் வந்தது. ஆனால், எனக்கு வரவில்லை. எனவே, குரூப் 2 தேர்வெழுதிய அனைவரது மதிப்பெண்களையும் கேட்டு டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்திடம் மனு செய்தேன். ஆனால், அதை தெரிவிக்க நிர்வாகம் மறுத்து விட்டது.
எனவே, எழுத்துத் தேர்வில் நான் எடுத்த மதிப்பெண் மற்றும் பிறர் எடுத்த மதிப்பெண் விவரங்களை வெளியிடும்படி டி.என்.பி.எஸ்.சி. செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு விசாரணைக்கு வந்தது. டி.என்.பி.எஸ்.சி. சார்பில் ஆஜரான வழக்குரைஞர் என்.எஸ்.நந்தகுமார், டி.என்.பி.எஸ்.சி. சார்பு செயலாளரின் அறிக்கையை தாக்கல் செய்தார்.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிந்த பின்னரே, தேர்வின் இறுதி முடிவை வெளியிட முடியும். அதேநேரம் மனுதாரர் கோபிகிருஷ்ணன் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண், கட்-ஆப் மதிப்பெண் விவரங்களை வழக்கு விசாரணையின் போது உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம். தாக்கல் செய்யப்படும் அனைத்து விவரங்களையும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.
மேலும், மனுதாரர் எஸ்.சி. சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரை விட குறைந்த மதிப்பெண் எடுத்தவர் எஸ்.சி. பிரிவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஆவார். இதனால், மனுதாரர் நேர்முகத் தேர்வுக்கு அழைகக்கப்படவில்லை என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்தது.
இதையடுத்து நீதிபதி அளித்த தீர்ப்பு விவரம் வருமாறு:
இந்த வழக்கில் எழுத்துத் தேர்வில் பங்கேற்றவர்களின் மதிப்பெண் விவரங்களை வெளியிடாமல், அவர்களில் சிலரை நேர்முகத் தேர்வுக்கு அழைப்பதை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் நியாயப்படுத்துகிறதா? என்ற கேள்வி எழுகிறது.
ஒரு அமைப்பு நேர்மையாக செயல்படுகிறது என்றால் அவற்றின் நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும். எனவே, எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண், கட்-ஆப் மதிப்பெண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இறுதியாக தேர்வு முடிந்த பின்னர் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. கூறுவதை ஏற்க முடியாது.
எழுத்துத் தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு தங்களை ஏன் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கவில்லை என்ற காரணம் தெரிய வேண்டும். அதேநேரம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒருவரின் மதிப்பெண் விவரங்களை வெளியிடும்போது, ஒட்டு மொத்தமாக தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் விவரங்களை வெளியிட, டி.என்.பி.எஸ். நிர்வாகம் ஏன் மறுக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்ற வாக்கியத்துக்கு உதாரணமாக டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் செயல்பட வேண்டும். எழுத்துத் தேர்வு மதிப்பெண் விவரங்களை பொது மக்களுக்குத் தெரியும் விதமாக வெளியிட்ட பின்னரே அடுத்த (நேர்முகத் தேர்வு) நிலைக்கு டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் செல்ல வேண்டும்.
எனவே, 2012-ஆம் ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி நடைபெற்ற குரூப் 2 தேர்வில் கலந்து கொண்ட அனைவரது மதிப்பெண் விவரங்களையும் டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நான்கு வாரத்துக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.
No comments:
Post a Comment