Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஆங்கில வழிக் கல்வி ஏன்?- பேரவையில் ஜெயலலிதா விளக்கம்

ஆங்கில வழிக் கல்வியைக் குறை கூறுவோர் தங்கள் பிள்ளைகளை தமிழ் மொழி வழிக் கல்வியில் படிக்க வைத்தார்களா? என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்துப் பேசும்போது, "எனது தலைமையிலான அரசைப் பொறுத்த வரையில், பயனற்ற இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பயனற்ற இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றுபவர்களை வித்தை காட்டி குழந்தையை ஏமாற்றுபவர்களோடு ஒப்பிட்டு இதே சட்டமன்றத்தில் பேசினேன்.
இதைப் புரிந்து கொண்ட மக்கள், 2011 ஆம் ஆண்டு அவ்வாறு ஏமாற்றியவர்களை தூக்கி எறிந்தார்கள். மக்கள் வாழ்வில் வளம் பெற வேண்டுமென்றால், மாநிலம் செழிக்க வேண்டுமென்றால், மனித வள வளர்ச்சியில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். இந்த கொள்கையைத்தான் எனது அரசு பின்பற்றி வருகிறது. எனவே தான், எதிர்கால சந்ததியினருக்கு பயன்தரக் கூடிய கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டுக்கும் நான் முக்கியத்துவம் அளித்து வருகிறேன்.
நடப்பு நிதியாண்டில், பள்ளிக் கல்விக்கென 16,965 கோடியே 37 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 2010-2011 ஆம் ஆண்டு, முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் பள்ளிக் கல்விக்காக ஒதுக்கப்பட்ட தொகை 11,274 கோடியே 75 லட்சம் ரூபாய் ஆகும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு. விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், நான்கு இணை சீருடைகள், புத்தகப் பைகள், காலணிகள், கணித உபகரணப் பெட்டிகள், கிரையான்ஸ் மற்றும் வண்ணப் பென்சில்கள், புவியியல் வரைபடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு, கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படுகின்றன. இதுதவிர, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் குறித்த நேரத்தில் பள்ளி செல்ல வசதியாக விலையில்லா மிதி வண்டிகள் வழங்கப்படுகின்றன. மடிக்கணினிகளும் வழங்கப்படுகின்றன.
இடை நிற்றலைக் குறைக்கும் பொருட்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு தலா 1,500 ரூபாயும், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு தலா 2,000 ரூபாயும் கல்வி ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. இந்தத் தொகை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு, மாணவ, மாணவியர் மேல்நிலைக் கல்வியை முடித்தவுடன் அவர்களுக்கு வழங்கப் படுகிறது. நடப்பாண்டில் மட்டும் இந்தத் திட்டத்தின்மூலம் கிட்டத்தட்ட 23 லட்சம் மாணவ, மாணவியர் பயன் அடைந்துள்ளனர்.
வருவாய் ஈட்டும் பெற்றோரை இழக்க நேரிடும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியரின் கல்வி எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, அவர்களின் பெயர்களில் 50,000 ரூபாய் பொதுத் துறை நிறுவனத்தில் வைப்பு நிதியாக செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1,080 மாணவ மாணவியர் பயன் அடைந்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துச் செல்லும் மாணவ மாணவியர் தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்வதற்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்குச் சென்று அலைவதை தவிர்க்கும் வகையில், இந்தப் வேலைவாய்ப்பு பதிவு முறையை பள்ளிகளிலேயே நாங்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இதேபோன்று சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருவாய் சான்றிதழ் ஆகியவற்றையும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் இடமிருந்து பள்ளித் தலைமை ஆசிரியர் பெற்று மாணவ, மாணவியருக்கு வழங்கும் முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மாணவ, மாணவியர் மன அழுத்தமின்றி, தேர்வு பயமின்றி மகிழ்ச்சியுடன் கல்வி கற்க ஏதுவாக, முப்பருவ முறை திட்டம் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையில் ஒவ்வொரு பருவத்திற்கும் ஒரு பாடநூல் வழங்கப்படுவதால், மாணவ மாணவியரின் கடுமையான புத்தகச் சுமை குறைக்கப்பட்டு உள்ளது. மாணவர்களது படைப்புச் சிந்தனை மற்றும் திறன்களை வளர்க்கும் செயல்பாடுகள் பாடநூல்களில் சேர்க்கப்பட்டுள்ளன.
உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியரின் மன அழுத்தத்தை குறைக்கும் பொருட்டு, நகரும் ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், இதுவரை 46,794 குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.
மாணவர்களது ஒருமுகத் தன்மையை மேம்படுத்துதல், பகுப்பாய்வுத் திறன் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறனை அதிகரித்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு சதுரங்க விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டு, இதற்கான போட்டிகளில் 11 லட்சத்து, 25 ஆயிரத்து 628 மாணவ மாணவியர் பங்கு பெற்றுள்ளனர்.
ஆங்கில வழிக் கல்வி ஏன்?
தங்களுடைய குழந்தைகள் ஆங்கில மொழியை கற்க வேண்டும் என்ற ஆர்வம் பெற்றோர்களிடையே இருப்பதால், கூடுதல் செலவையும் பொருட்படுத்தாமல் ஆங்கில வழி கல்வியினை போதிக்கும் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடையே மேலோங்கி நிற்கிறது.
ஏழை, எளிய பெற்றோர்களின் நிதிச் சுமையினை குறைக்கும் வகையிலும்; ஆங்கில மொழியில் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணமும், அதற்குரிய ஆற்றலும் உள்ள குழந்தைகளுக்கு அதற்கான வாய்ப்பை அரசு பள்ளிகளிலேயே ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற நோக்கத்துடன், கடந்த ஆண்டு சில பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவு தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு 6,594 பள்ளிகளில் ஒன்றாம் மற்றும் 6 ஆம் வகுப்புகளில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப் பட்டுள்ளன. இது தவிர ஆங்கில பேச்சாற்றல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
திமுகவுக்கு கேள்வி
இந்த அரசின் நடவடிக்கை மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் இதை குறை கூறி வருகின்றனர். ஆனால், அவ்வாறு குறை கூறுவோர் தங்கள் பிள்ளைகளை தமிழ் மொழி வழிக் கல்வியில் படிக்க வைத்தார்களா? தி.மு.க.வின் சட்டமன்றக் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், தனது பிள்ளைகளை தமிழ் மொழி வழிக் கல்வியில் படிக்க வைத்தாரா? இல்லையே! அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் வைத்திருக்கும் பள்ளிகளிலாவது தமிழ் மொழி வழிக் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை.
பள்ளிகளின் பெயர்கள் கூட ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன. 'துர்காவதி கல்வி அறக்கட்டளை' என்ற அமைப்பு, சென்னை-29, மேத்தா நகர், ராஜேஸ்வரி தெருவில் சன்ஷைன் அகாடமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி என்ற பள்ளியை இயக்கி வருகிறது. இந்தப் பள்ளியின் இயக்குநர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை சபரீசன். மு.க.ஸ்டாலினின் மருமகள் கிருத்திகா உதயநிதியும் இந்த அறக்கட்டளையில் உறுப்பினராக இருக்கிறார். இங்கு என்ன தமிழ்வழிக் கல்வி போதிக்கப்படுகிறதா?
இதேபோன்று, சென்னை, வேளச்சேரி, டாக்டர் சீதாபதி நகர், ராணி தெருவில், சன்ஷைன் மாண்டிசோரி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியும், மடிப்பாக்கத்தில் சன்சைன் சென்னை சீனியர் செகன்ட்ரி ஸ்கூல் இயங்கி வருகின்றன. இந்த இரண்டு பள்ளிகளுக்கும் இயக்குநராக இருப்பவர், மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை சபரீசன். இங்கு ஆங்கில வழிக் கல்வி மாத்திரம் இல்லை. இந்தியும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. மழலையர் வகுப்பிற்கான ஆண்டுக் கட்டணம் 9,000 ரூபாய். 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான கட்டணம் 15,400 ரூபாய்.
தனியார் பள்ளிகள் எல்லாம் இதேபோன்று ஆங்கில மொழி வழியில் வகுப்புகளை நடத்தி அதிக கட்டணம் வசூலிக்கின்றன. எனவேதான், கட்டணம் ஏதும் செலுத்தாமல் ஏழை எளிய மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காகத்தான், 6,594 அரசு பள்ளிகளில், ஒரு பிரிவில் ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது" என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

No comments:

Post a Comment


web stats

web stats