திருப்பூர் மாவட்டத்தில் 114 மையங்களில், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான செய்முறை தேர்வு, நேற்று துவங்கியது. இத்தேர்வு மதிப்பெண் பதியும் நடைமுறையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. நடப்பு (2013-14) கல்வியாண்டில், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, மார்ச் 3ல் துவங்கி, 25ம் தேதி முடிவடைகிறது. இம்மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, திருப்பூர் மாவட்டத்தில் நேற்று துவங்கியது.
காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை, மதியம் 1.30 முதல்,4.30 மணி வரை என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் 114 மையங்களில், 15,050 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். மாணவர்களின் வருகைப்பதிவு, நடத்தை மற்றும் அறிவியல் செய்முறை பயிற்சிகளில் அவர்கள் காட்டிய ஈடுபாடு, ரெக்கார்டு நோட் டில் படம் வரைதல் ஆகியவற்றின் அடிப்படையில் 20 மதிப்பெண், செய்முறை தேர்வில், அவர்கள் செய்து முடிக்கும் பரிசோதனைக்கு 30 மதிப்பெண் என மொத்தம் 50 மதிப்பெண் வழங்கப்படுகிறது.
20ம் தேதிக்குள், செய்முறை தேர்வை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பூர் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளி, மண்ணரை சசூரி மெட்ரிக் பள்ளி, ஊத்துக்குளி கொங்குமெட்ரிக் பள்ளிகளில் முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி ஆய்வு செய்தார்.
நடைமுறையில் மாற்றம் செய்முறை தேர்வு மதிப்பெண் விவரத்தை, "ஆன்-லைனில்' டவுன்லோடு செய்த தாளில் பதிவு செய்யும் புதிய நடைமுறையை, பள்ளி கல்வித்துறை அமல்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டுகளில், பள்ளி கல்வித்துறையிடம் இருந்து முதன்மை கல்வி அலுவலகத்துக்கு, மதிப்பெண் தாள் மொத்தமாக அனுப்பப்படும். அவை, பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பப் படும். அதில், மாவட்டம், பள்ளி, குரூப், பாடம், பிரிவு, மீடியம்ஆகியவற்றுக்கு சங்கேத (கோடு) எண் குறிப்பிட்டு, மாணவர்களின் தேர்வு எண்கள், மதிப்பெண்
விவரங்களை ஆசிரியர்கள் எழுதித்தர வேண்டும்.அதன்பின், மதிப்பெண் தாள்களை முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைப்பது, நடைமுறையாக இருந்தது. நடப்பாண்டு, இந்நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறை இணைய தளத்தில், குறிப்பிட்ட முகவரிக்கு சென்றால், செய்முறை தேர்வு மதிப்பெண் தாள் இருக்கும். அதை,"டவுன்லோடு' செய்து, பள்ளியின் தேவைக்கு ஏற்ப, "பிரின்ட்'எடுத்துக் கொள்ள வேண்டும். அதில், கோடு எண் இருக்கும்.
உதாரணமாக, 25-597-006-102 என, அதில் இருந்தால் 25 என்பது மாவட்டத்தின் பெயர், 597 என்பது பள்ளியின் எண், 006 என்பது பாடம், 102 என்பது குரூப் ஆக உள்ளது. அத்தாளில் வரிசை எண்கள், மாணவர்களின் தேர்வு எண்களும் அச்சிடப்பட்டு இருக்கும். ஆசிரியர்கள், மாணவர்களின்எண்ணுக்கு அடுத்துள்ள மூன்று கட்டங்களில், ரெக்கார்டு நோட் மதிப்பெண், செய்முறை தேர்வுபரிசோதனையில் பெற்ற மதிப்பெண், மொத்த மதிப்பெண் எழுத வேண்டும்.
ஒவ்வொரு பாடத்துக்கும் மதிப்பெண் தாளில் குறிப்பிட்டு, அனைத்து செய்முறை தேர்வும் முடிந்தபின், மொத்தமாக "சீல்' வைத்து, முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
No comments:
Post a Comment