Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணை 82 என நிர்ணயித்துள்ளதால் கூடுதலாக 10 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெற வாய்ப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் 150-க்கு 82 மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெறலாம்.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்: ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவதற்கான தேர்ச்சி மதிப்பெண் (60 சதவீதம்) 150-க்கு 90 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிளித்த முதல்வர் ஜெயலலிதா, ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என அறிவித்தார்.இந்த மதிப்பெண் சலுகைக்குப் பிறகு இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 82.5 ஆகக் குறைகிறது. இந்த மதிப்பெண்ணை முழு மதிப்பெண்ணாக மாற்றுவதற்காக இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 82 என நிர்ணயம் செய்யப்படுகிறது.அதேநேரத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற பொதுப்பிரிவினர் 150-க்கு 90 மதிப்பெண் பெற வேண்டும்.
இந்த மதிப்பெண் சலுகையையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்படுகிறது.இனி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுகளிலும் பொதுப்பிரிவினருக்கான தேர்ச்சிமதிப்பெண் 90 எனவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் 82 எனவும் நிர்ணயிக்கப்படுவதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆயிரம் பேர் வரை அதிகரிக்கலாம்: 
இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சிமதிப்பெண்ணை 82.5-க்குப் பதில் 82 என நிர்ணயித்துள்ளதால் 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக 10 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெற வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகள் மட்டுமே இடம்பெறும்.எனவே, 82.5 என்ற மதிப்பெண்ணுக்குப் பதிலாக 82 அல்லது 83 என்ற முழு மதிப்பெண் மட்டுமே தேர்ச்சி மதிப்பெண்ணாக நிர்ணயிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண் வரை பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினர் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கென தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.அதன் பிறகே, பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் இருக்கும்என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment


web stats

web stats