"தரமான ஆசிரியர்களை, தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக, ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் மதிப்பெண்களுக்கு, இட ஒதுக்கீடு கேட்பது நியாயமாகாது,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர், பழனியப்பன் தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று, மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, ''ஆசிரியர் தேர்வில், இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம், 'மதிப்பெண் சலுகை வழங்கலாம்' எனக் கூறியுள்ளது. ஆனால், தமிழக அரசு, அதை பின்பற்றவில்லை,'' என்றார்.
அதற்கு, அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது:
தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம், சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அதை பின்பற்ற வேண்டும் என அவசியம் இல்லை. தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக, ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.
இட ஒதுக்கீடு:
இதில், தேர்ச்சி பெற, இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. ஆனால், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வேலை வழங்கும்போது, இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது.
தரமான ஆசிரியர்:
பள்ளித் தேர்வில், மதிப்பெண்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவதில்லை. மாணவர்கள் உயர்கல்வியில் சேரும்போது தான், இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. அதேபோல், மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்க, தரமான ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும். எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வில், மதிப்பெண்களுக்கு சலுகை வழங்க முடியாது; இதை புரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment