மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, துாய்மை இந்தியா திட்டத்தை கண்காணிக்க புதுச்சேரி பள்ளிகளில், 'மாணவர் சுகாதார துாதர் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, அக்டோபர் 2, காந்தி பிறந்த நாளில், 'சுவச் பாரத்' எனப்படும், துாய்மை இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்து, துடைப்பத்தைக் கையிலெடுத்தார்.
துாய்மை
மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் வளாகங்கள் துாய்மைப்படுத்தப்பட்டன. இந்தப் பணியில், மாநில அரசுகளும் தாங்களாக முன்வந்து இணைந்தன. மாநில அரசின் அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரி வளாகங்கள் துாய்மைப்படுத்தப்பட்டன.
துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளிகளின் கழிவறைகள் இருப்பது உறுதி செய்ய உத்தரவிடப் பட்டுள்ளது. குறிப்பாக, பள்ளி மாணவிகளுக்கென தனி கழிவறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு பள்ளிகளில் சுத்தமான குடிநீர், கழிவறை வசதிகளுக்கான உட்கட்டமைப்புகள் ஏற்கனவே செய்து கொடுத்துள்ள போதிலும், பராமரிப்பு படுமோசமாக உள்ளது. இதனை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், பள்ளிகளில் துாய்மை திட்டம் ஒப்புக்குக்கென செயல்படுத்தப்படுகிறது.
மாணவர்களின் பங்களிப்புடன், பள்ளி வளாகத்தை கண்காணிக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, புதுச்சேரி பள்ளிகளில்,'மாணவர் சுகாதார துாதர் திட்டம்' அறிமுகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி, ஒரு பள்ளியில் இருந்து ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் சுகாதார துாதராக நியமிக்கப்படுவர்.
இவர்களுக்கு சமூக பொறுப்புகள் அளிக்கப்பட்டு, பள்ளிகளின் துாய்மை இந்தியா திட்டத்தின் அங்கமாக கருதப்படுவர்.
இவர்களது பள்ளி பொறுப்புகள்
1. பள்ளிகளில் சுகாதாரமான முறை யில் குடிநீர் வழங்கப்படுகிறா என்பதை அவ்வப்போது கண்டறிந்து உறுதி செய்ய வேண்டும்.
2. குடிநீர் வினியோகிக்கப்படும் இடங்களை சுத்தமாக வைத்திருக்க உதவுதோடு, தண்ணீர் வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
3. வகுப்பறை, கழிவறைகள், ஆசிரியர் அறைகள், விளையாட்டு மைதானம், மதிய உணவு சமையல் கூடம், ஸ்டோர் ரூம் மற்றும் ஏனைய இடங்களில் குப்பை தொட்டிகள் உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
4. கழிவறைகளில் கை கழுவ சோப்பு, ஏனைய கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்கும் பொருட்கள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
5. அனைத்து காலங்களிலும் பள்ளி கழிவறைகள் பயன்படுத்தும் நிலையில் உள்ளனவா என்பதை கண்டறிய வேண்டும்.
6. பள்ளி கட்டடம், மரப்பொருட்கள், மற்றும் ஏனைய கருவிகளை மாணவர்கள் சேதப்படுத்தாமல் இருக்க அறிவுறுத்தவும், கண்காணிக்கவும் வேண்டும்.
7. துாய்மையான பள்ளி குறித்து பெயிண்டிங், சுலோகம் மூலம் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மொத்தத்தில், பள்ளியின் சமூக பொறுப்புள்ள 'லீடர்' ஆக, பள்ளிகளில் துாய்மை இந்தியா திட்டத்திற்கு முதுகெலும்பாக திகழவுள்ள, மாணவர் சுகாதார துாதர் திட்டத்தில் சேர்க்கப்பட உள்ள மாணவர் பெயர், பயிலும் வகுப்பு குறித்த விபரங்களை, அந்தந்த பள்ளிகள் இன்று 30ம் தேதிக்குள் அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
-நமது சிறப்பு நிருபர்-
No comments:
Post a Comment