Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

இன்ஜி., பொதுப்பிரிவு கவுன்சிலிங் இன்று துவக்கம்:இடைத்தரகர்களுக்கு அண்ணா பல்கலையில்தடை

தமிழகத்தில் உள்ள, 524 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 1.92 லட்சம் இடங்களுக்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங், அண்ணா பல்கலையில் இன்று துவங்குகிறது. பல்கலை வளாகத்தில், இடைத்தரகர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, 524 இன்ஜி., கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டில், 1.92 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு, ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், தமிழக அரசு சார்பில் அண்ணா பல்கலை மூலம் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங், 23ம் தேதி துவங்கியது. முதல் நாளில், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடந்தது. இதில், 500 இடங்களில், 352 இடங்கள் மட்டுமே நிரம்பின. மாற்றுத்திறனாளிகளுக்கான, 5,000 இடங்களுக்கு, 221 பேர் மட்டுமே தகுதி பெற்றனர்.

இந்நிலையில், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், இன்று துவங்குகிறது. காலை, 7:30 மணி முதல் இரவு, 8:00 மணி வரை தினமும் கவுன்சிலிங் நடக்கிறது. ஜூலை, 23, 24ல், தொழிற்கல்வி மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடக்கிறது.அழைப்பு கடிதங்கள், அண்ணா பல்கலையின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. மாணவர்கள் அதைப் பார்த்து, 2 மணி நேரத்திற்கு முன்னதாக பல்கலை வளாகத்துக்கு வர அறிவுறுத்தப்பட்டுஉள்ளனர்.இதற்கிடையில், பல்கலை வளாகத்தில் மாணவர்களை குழப்பும் விதமாக, வணிக நோக்குடன் செயல்படும் கல்லுாரி களின் இடைத்தரகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பல்கலை வளாகத்திற்குள், எந்த பெற்றோரையும் மாணவரையும் சந்தித்து பேசவும், அவர்களிடம் தங்களின் கல்லுாரி குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கவும், தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக, பல்கலை வளாகத்தில் எச்சரிக்கை அறிவிப்புகளும் வைக்கப்பட்டுள்ளன.

அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகள் பட்டியல் வெளியாகுமா?

இன்று துவங்கும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், 1.30 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். கவுன்சிலிங்கில் விருப்ப பாடங்கள் மற்றும் கல்லுாரிகளை தேர்வு செய்ய, எளிதாக கல்லுாரிகளின் தேர்ச்சி சதவீத பட்டியலை அண்ணா பல்கலை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதேபோல, கல்லுாரிகளின் கட்டண விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

வரும் கல்வி ஆண்டில் இன்ஜி., கல்லுாரிகளுக்கான இணைப்பு அங்கீகார அந்தஸ்து, கடந்த வாரம் வழங்கப்பட்ட நிலையில், எந்தெந்த கல்லுாரிகள் இணைப்பு பெற்றன; எந்தெந்த கல்லுாரிகள் இணைப்பு பெறவில்லை; எந்த கல்லுாரிகள் புதிதாக சேர்ந்தன என்பன போன்ற விவரங்களை, அண்ணா பல்கலை இதுவரை வெளியிடவில்லை.மாறாக இணையதளத்தில், கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட கல்லுாரிகள் மற்றும் இடங்களின் எண்ணிக்கை மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பெற்றோரும், மாணவர்களும் ஏமாறாமல் தடுக்க, அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளின் பட்டியலை இணையதளத்தில் வெளியிட பெற்றோர் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

பஸ் கட்டண சலுகை; 

விடுதி வசதி:கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்காக வெளியூர்களிலிருந்து வரும் மாணவர்கள், அவர்களுடன் துணைக்கு வரும் ஒருவருக்கு, தமிழக அரசு பேருந்துகளில், 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது. அதேபோல், வெளியூர்களிலிருந்து வரும் மாணவியர், உறவுப் பெண் துணையுடன் வந்தால் அவர்கள் தங்குவதற்கு, பல்கலை வளாகத்திலுள்ள ரோஜா விடுதியில் வசதி செய்யப்பட்டுள்ளது.

கவுன்சிலிங்குக்கு முந்தைய நாள் வருவோர், மாலை, 6:30 மணிக்கு மேல் விடுதியில் தங்கி, மறுநாள் காலையில் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். பின், கவுன்சிலிங் முடிந்ததும், மாலையில் விடுதியை காலி செய்து அடுத்த மாணவிக்கு இடம் கொடுக்கவேண்டும் என, பல்கலை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுஉள்ளனர்.பல்கலை வளாகத்தில் விசாரணை மையம், உடற்பரிசோதனை மையம் மற்றும் கல்லுாரி வைப்புத்தொகைசெலுத்துவதற்கான வங்கி கவுன்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன. பல வங்கிகள் சார்பில், கடன் வசதிக்கான உதவி முகாம்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

No comments:

Post a Comment


web stats

web stats