அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,) மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு அரசு பல்வேறு சலுகைகளை கூறி அழைப்பு விடுத்துள்ளது. பெரும்பாலான மாணவர்கள் பள்ளி இறுதி வகுப்பு முடித்தவுடன் பிளஸ் 2 வகுப்பில் சேர்ந்து மருத்துவம் அல்லது பொறியியல் பட்டதாரியாகவே விரும்புகின்றனர். ஒரு சில ஏழைக் குடும்பத்தில் உள்ள மாணவர்கள் தான் தொழிற்கல்வி படிக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 10ம் வகுப்பில் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்களுக்குதான் ஐ.டி.ஐ.,யில் இடம் பெற முடியும் என்ற நிலை இருந்தது. தற்போது அந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது. பொறியியல் படிப்புக்கு இடம் தாராளமாக கிடைப்பதால் ஐ.டி.ஐ.,க்கு இருந்த மவுசு குறையத் துவங்கியது.
கடலுார் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் 4ம், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் 20ம், அரசு உதவி பெறும் தொழிற் பயிற்சி நிலையங்கள் 2ம் உள்ளன. இவற்றில் அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் 4 ஐ.டி.ஐ.,யில் பல்வேறு டிரேடுகளில் 1100 இடங்களும், தனியார் ஐ.டி.ஐ.,களில் 1400 இடங்களும் உள்ளன.
இந்த ஆண்டு இதுவரை 3,950 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. எதிர்பார்த்த அளவிற்கு விண்ணப்பங்கள் வராததால் விண்ணப்பங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய நாளை (30ம் தேதி) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களை கவர்ந்திழுக்க அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஐ.டி.ஐ., நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு மாதா மாதம் உதவித்தொகை 500 ரூபாய், பஸ் கட்டண சலுகை, இலவச சைக்கிள், லேப்டாப், பாடப் புத்தகங்கள், வரைபடக் கருவிகள், 2 ஜோடி சீருடைகள், அவற்றை தைப்பதற்கான கூலித்தொகை, ஷூ உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதனால் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை கடந்தாண்டை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment