புதுடில்லி : ஊதிய உயர்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, கார்களை விற்பனை செய்வதில், வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தீவிரமாக களம் இறங்கியுள்ளன.
மத்திய அரசின், 50 லட்சம் ஊழியர்கள் மற்றும், 58 லட்சம் ஓய்வூதியர்களுக்கு, 7வது ஊதியக் குழு பரிந்துரைப்படி, 23.5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது. இது, இந்தாண்டு, ஜனவரி முதல், முன்தேதியிட்டு அமலுக்கு வருவதால், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு கணிசமாக, ‘அரியர்ஸ்’ பணம் கிடைக்கும்.
அரசு அதிகாரிகளின் பங்களிப்பு :அத்துடன், ஊதிய உயர்வு காரணமாகவும் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பதால், அவர்களுக்கு கார்களை விற்பனை செய்ய, மாருதி சுசூகி இந்தியா, ஹூண்டாய், ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்கள் தீவிரமாக களமிறங்கிஉள்ளன. மாருதி சுசூகி நிறுவன செய்தி தொடர்பாளர் கூறுகையில்,‘வழக்கமாக, நிறுவனத்தின் கார் விற்பனையில், மத்திய, மாநில அரசு அதிகாரிகளின் பங்களிப்பு, 17 சதவீதமாக இருக்கும். இந்தாண்டு, இது, 25 சதவீதமாக உயர்ந்து, 2.50 லட்சம் கார்கள் விற்பனையாகும் என, தெரிகிறது. இதற்கு, ‘சியஸ், எர்டிகா, விட்டாரா பிரெஸ்ஸா’ உள்ளிட்ட புதிய மாடல்கள் துணை புரியும்’ என்றார்.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் ஜானேஸ்வர் சென் கூறும்போது, ‘‘பணப்புழக்கம் காரணமாக, அரசு ஊழியர்கள் ஆடம்பர பொருட்களை வாங்க அதிகம் செலவிடுவர். இதை கருத்தில் கொண்டு, கார் விற்பனையை அதிகரிப்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளோம்,’’ என, தெரிவித்துள்ளார்.
புதிய சலுகைகள் :ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் பொது மேலாளர் புனித் ஆனந்த் கூறுகையில், ‘‘ஊதிய உயர்வு, அரசு ஊழியர்களின் கார் ஆசையை நிறைவேற்றும். அத்தகையோரை ஈர்ப்பதற்காக, ஏற்கனவே, கார் விற்பனைக்கு அளித்து வரும் சலுகைகளுடன், ‘பிரைட் ஆப் இந்தியா’ திட்டம் மூலம், கூடுதலாக, 7,000 ரூபாய் வரை சலுகைகள் வழங்கப்படும்,’’ என, தெரிவித்தார். இதுபோல, கார் விற்பனையை உயர்த்த, டாடா மோட்டார்ஸ், நிசான், போக்ஸ்வேகன் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அவை, கவர்ச்சிகரமான சலுகைகளுடன் கூடிய விற்பனை மேம்பாட்டு திட்டங்களை வடிவமைத்து வருகின்றன. விரைவில், இது பற்றிய அறிவிப்புகளை நிறுவனங்கள் வெளியிடும் என, கார் முகவர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த, 2008ல், ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு, இரு ஆண்டுகளுக்கு முன்தேதியிட்ட ஊதிய உயர்வு கிடைத்தது. அப்போது, கார் விற்பனை, 20 சதவீதம் அதிகரித்தது.
No comments:
Post a Comment