Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

பள்ளிகளுக்கு திடீர் "விசிட்' அடித்து ஆசிரியர் வேலை பார்த்த அமைச்சர்

பள்ளி கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு, நேற்று, திடீர், "விசிட்' அடித்தார். அப்போது, மாணவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு, அவர்களின் கற்றல் திறன் குறித்து, ஆய்வு செய்தார்
.

கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா, எஸ்.எஸ்.ஏ., இயக்குனர் மகேஸ்வரன், பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் ஆகியோருடன், நேற்று காலை, 9:00 மணிக்கு, சென்னை, வேளச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, அமைச்சர் சென்றார். அங்கு, வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்றார். பின், 8, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன், கற்றல் - கற்பித்தல் குறித்து பேசினார். மாணவரோடு மாணவராக, வகுப்பறையில் அமர்ந்து, ஆசிரியரை பாடம் எடுக்க வைத்தார். இதை சற்றும் எதிர்பாராத ஆசிரியருக்கு, ஒரு பக்கம் மகிழ்ச்சியும், மறு பக்கம் பதற்றமும் ஏற்பட்டது. பின், நூலகம், உடற்பயிற்சி வகுப்பு உள்ளிட்டவற்றையும், அமைச்சர் பார்வையிட்டார். சென்னை, மேடவாக்கம், அரசு ஆரம்பப் பள்ளியில், திடீரென ஆசிரியராக மாறி, மாணவர்களிடம், பல்வேறு கேள்விகளை கேட்டு, உற்சாகப்படுத்தினார். மாணவர்களை, வாக்கியங்களை படிக்கச் சொல்லியும், எழுதச் சொல்லியும், அவர்களின் கற்றல் திறனை, அமைச்சர் ஆய்வு செய்தார். மேடவாக்கம் அருகே, ஜல்லடியன்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியிலும், அமைச்சரின் கேள்விகள் தொடர்ந்தன. தமிழ் மற்றும் சமூகவியல் பாடங்களில், கேள்விகளை கேட்டார். மாணவர்கள், சரியாக பதிலளித்ததைக் கண்டு, அமைச்சர் மற்றும் அதிகாரிகள் குழு, மகிழ்ச்சி அடைந்தது. இறுதியில், தாம்பரம், ஜெயகோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளியில், காஞ்சிபுரம் மாவட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட அளவில், அரசு நலத்திட்ட உதவிகள், மாணவர்களுக்கு, எந்த அளவிற்கு சென்றடைந்தது என்பது குறித்து, ஆய்வு செய்த அமைச்சர், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என, கேட்டுக்கொண்டார். அரசியலில் நுழைவதற்கு முன், வைகைச் செல்வன், பல ஆண்டுகளாக, சென்னை, பாரிமுனையில் உள்ள முத்தியால்பேட்டை மேல்நிலைப் பள்ளியில் (அரசு நிதியுதவி பெறும் பள்ளி), தமிழ் ஆசிரியராக வேலை பார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment


web stats

web stats