Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

தனியார் பள்ளிகளுக்கு 12% சேவை வரி: வருமான வரித்துறை நோட்டீஸ்

நாடு முழுவதும் உள்ள அனைத்து வகையான தனியார் பள்ளிகளுக்கு, 12 சதவீத சேவை வரி செலுத்துமாறு அறிவுறுத்தி, வருமான வரித் துறை, நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாணவர்களிடம், எந்தெந்த தலைப்புகளின் கீழ், கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ, அவை அனைத்திற்கும், வரி செலுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த கூடுதல் வரியையும், மாணவர்களிடமே வசூலிக்க வேண்டியிருக்கும். பெற்றோருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க, தனியார் பள்ளி நிர்வாகிகள், வரும், 7ம் தேதி, பெங்களூருவில் கூடுகின்றனர்.
நடப்பு ஆண்டுக்கான மத்திய அரசு பட்ஜெட்டில், தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த வரி விலக்கு சலுகைகள் திரும்ப பெறப்பட்டு, சேவை வரி விதிக்கப்பட்டது. வரி விலக்கு வாபஸ், இந்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வந்துள்ளதை சுட்டிக்காட்டி, 12 சதவீத சேவை வரி செலுத்துமாறு, நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு, வருமான வரித்துறை, நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த ஜூன் மாத இறுதியில் இருந்து, நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள 4,000 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கும், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், சேவை வரி செலுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நெருக்கடியால், நாடு முழுவதும், தனியார் பள்ளி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து, விவாதித்து, முடிவு எடுப்பதற்காக, வரும், 7ம் தேதி, பெங்களூருவில், அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார் கூறியதாவது: மாணவர்களுக்கான கல்வி கட்டணம், நோட்டு புத்தக கட்டணம், வாகன கட்டணம், கராத்தே கட்டணம், நடனம் கற்றுக்கொடுத்தால், அதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் என, ஒன்று விடாமல், அனைத்து இனங்களுக்கும், தனித்தனியே வசூலிக்கப்படும் கட்டணத்தில், 12 சதவீதத்தை, சேவை வரியாக செலுத்த வேண்டும் என, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன. இது, எங்களுக்கு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சராசரியாக, ஒவ்வொரு பள்ளியும், 1 லட்சம் ரூபாய் முதல், 5 லட்சம் ரூபாய் வரை, வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
இதனால் ஏற்படும் நஷ்டத்தை சரிசெய்ய, கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை, எங்களுக்கு ஏற்படும். இதனால், கடைசியில், பெற்றோர் பாதிக்கப்படுவர். இதுகுறித்து, விவாதித்து, முடிவெடுக்க, வரும், 7ம் தேதி, பெங்களூருவில், தென் மாநில அளவிலான சங்க நிர்வாகிகள் கூடி, விவாதிக்க உள்ளோம். அதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
முதற்கட்டமாக, இந்த வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என, வலியுறுத்தி, 50 லட்சம் பெற்றோர் மற்றும் எம்.பி.,க்களிடம் கையெழுத்தை பெற்று, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்திடம் வழங்க, முடிவு எடுத்துள்ளோம். இவ்வாறு, நந்தகுமார் கூறினார்.

No comments:

Post a Comment


web stats

web stats