தமிழக அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளில் அடுத்தடுத்து முறைகேடு புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
சில மாதங்களுக்கு முன்பு பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் முறைகேடுகள் நடந்து இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் அதே போன்று ஆசிரியர்கள் தகுதி தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது.
தமிழக அரசு ஆசிரியர் பணிகளுக்கு ஆண்டுதோறும் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஆசிரியர்களாக பணியாற்ற விரும்புகிறவர்களுக்கு முதல் தாள் பேப்பரும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர்களாக பணியாற்ற விரும்புவர்களுக்கு 2-ம் தாள் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த தேர்வு நடத்தப்பட்ட போது மொத்தம் 7 லட்சத்து 53 ஆயிரம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினார்கள். அவர்களில் 34 ஆயிரத்து 979 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் ஊழல் நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்தன. தேர்வு எழுதியவர்களில் பலர் இதுபற்றி புகார் மனுக்களை அளித்தனர். அதன்பேரில் ஆசிரியர் தேர்வு வாரியம் மீண்டும் தேர்வு தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டது.
7½ லட்சம் பேர் எழுதிய தேர்வு தாள்களை மீண்டும் திருத்தி அதில் தேர்வானவர்களின் விவரங்களை இணைய தளத்தில் வெளியிட்டனர். அப்போது ஏற்கனவே தேர்வானதாக அறிவிக்கப்பட்டவர்களில் பலரது பெயர் விடுபட்டு இருந்தது.
சுமார் 200 ஆசிரியர்கள் அவ்வாறு தேர்வாகாமல் விடுபட்டு இருந்தனர். இதுபற்றி ஆய்வு செய்தபோது அந்த 200 பேர் தேர்வில் முறைகேடுகள் நடந்து இருப்பது தெரிய வந்தது. போலி மதிப்பெண்களை அளித்து அந்த 200 ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டு இருந்தது அம்பலமானது.
ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்து பதிவு செய்யப்பட்ட போது மதிப்பெண்களை திருத்தும் தில்லுமுல்லு நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதுபற்றி விரிவாக விசாரணைக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இந்த முறைகேட்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உள்ளவர்களே சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.
போலி மதிப்பெண் பெற்று தேர்வு ஆனதாக சந்தேகிக்கப்படும் சுமார் 200 பேரிடம் அதிரடி விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது ஆசிரியர் தகுதி தேர்வில் நடந்த தில்லுமுல்லுகள் முழுமையாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment