வருமானவரிச் சட்டத்தின் கீழ் தணிக்கை தேவைப்படாத பிரிவினர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடந்த மாதம் (ஜூலை) 31-ந் தேதியை கடைசி நாளாக வருமான வரித்துறை அறிவித்து இருந்தது. பின்னர் ஒரு மாத காலம் அதாவது வருகிற 31-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அந்த கால அவகாசமும் வருகிற 31-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
மாத ஊதியம், ஓய்வூதியம், வீட்டு வாடகை உள்ளிட்ட சொத்திலிருந்து வருமானம் பெறுவோர், மூலதன மதிப்பு உயர்வு, வர்த்தகம் அல்லது தொழில் மூலம் வருமானம் பெறுவோர், இதர வருமானம் பெறுவோர் இந்த வகையின் கீழ் வருகின்றனர்.
வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்வோருக்கு அபராத கட்டணம் ஏதும் இல்லை. மொத்த ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு பிறகு அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்கு முன்பாக தாக்கல் செய்தால் அபராத கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் மேல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு பிறகு தொடங்கி டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்தால் தாமத கட்டணம் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும்.
மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக இருப்போர் தங்கள் வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு பிறகு, அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் தாக்கல் செய்தால் தாமத கட்டணம் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த கால கட்டத்துக்கு பிறகு வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய முடியாது.
அனைத்து வரி செலுத்துவோரும் தங்களது வருமானவரி கணக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும். மாத ஊதியம், இதர ஊதியங்கள் மற்றும் வீட்டு சொத்தில் இருந்து வருமானம் பெறுவோர் ஆகியோர் காகித வடிவில் வருமானவரி கணக்கை தாக்கல் செய்யலாம்.
வருமானவரி செலுத்துவோர் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு ஏதுவாக, சென்னை, நுங்கம்பாக்கம், உத்தமர் காந்தி சாலையில் உள்ள வருமானவரி அலுவலகத்தில் வருமான வரி கணக்கு முன் தயாரிப்பு உதவி மையமும் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் வருகிற 31-ந் தேதி வரை வருமானவரி கணக்கை அபராதம் இன்றி தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மழை வெள்ள பெருக்கு காரணமாக கேரள, கர்நாடக மாநிலங்கள் சார்பில் மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த தேதியில் மாற்றம் செய்வது குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வரவில்லை.
மேற்கண்ட தகவல்களை வருமான வரித்துறை அதி காரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment