Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஆசிரியர் பணி: மன நிறைவா? மன உளைச்சலா?ஆ. பழனியப்பன்

மாறிவரும் கல்விச்சூழலில் தங்களது பணியில் எதிர்கொள்கிற சவால்கள், பிரச்சினைகள் குறித்து மனம் திறந்து பேசுகின்றனர் ஆசிரியர்கள் செப்டம்பர் 5: ஆசிரியர் தினம்
கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகள் தொடர்ச்சியாக மாறிவருகின்றன. கால மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்களின் சிந்தனைப் போக்கிலும்
பெரும் மாற்றம் காணப்படுகிறது. இப்படியான கல்விச்சூழலில், கல்வித்தேரை இழுத்துச் செல்லும் ஆசிரியர்களின் மனநிலை எப்படி இருக்கிறது? அவர்கள் சந்திக்கிற சவால்கள், பிரச்சினைகள் என்ன? ஆசான் என்கிற மகத்துவம் மிகுந்த பணியை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? இதுகுறித்து சில ஆசிரியர்களிடம் பேசினோம்...

மதுராந்தகத்தைச் சேர்ந்த மா.ச.முனுசாமி, ஆசிரியர் பணி மீதான பேரார்வம் காரணமாக, சுகாதாரத்துறை அதிகாரி பதவியை உதறிவிட்டு ஆசிரியர் பணிக்கு வந்தவர். முன்னுதாரண ஆசிரியர் என்ற பெருமையைப் பெற்ற முனுசாமி, தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்:


"35 ஆண்டுகாலம் ஆசிரியராகப் பணியாற்றினேன். எல்லாமே கிராமப்புறப் பள்ளிகள். எல்லோருமே பள்ளிக்கு வரும் முதல் தலைமுறையினர். பெரும்பாலும், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர். கிழிந்த, பழைய உடைகளை அணிந்து வருவார்கள். சட்டைப் பொத்தான் அறுந்துவிட்டால் சீமைக்கருவேல் முள் குத்திக்கொண்டு வருவார்கள். அவர்களது சட்டைகளை வாங்கி பொத்தான்களை தைத்துக் கொடுத்து அனுப்புவேன். அதைப் பார்த்து அவர்களின் பெற்றோர் அவ்வளவு சந்தோஷப்படுவார்கள். அப்போது இலவசப் புத்தகம் எல்லாம் கிடையாது. கிராமத்தில் வசதியான நபர்களை அணுகி, ‘பிள்ளைகளுக்கு நன்கொடையாகப் புத்தகம் வாங்கித் தாருங்கள்’ என்று கேட்டு வாங்குவேன்.

சில பெற்றோர், தன் பிள்ளையை திடீரென பள்ளியில் இருந்து நிறுத்தி விடுவார்கள். மறுநாள், அவர்கள் வேலை செய்யும் வயலுக்குச் சென்று, அவர்களிடம் பேசி மீண்டும் அந்த மாணவனை பள்ளிக்கு வரவழைப்பேன். பொதுவாக, பிள்ளைகளை அடித்தால்தான், அவரை வாத்தியார் என்று மதிப்பார்கள். ஆனால், நான் மாணவர்களை ஒருபோதும் அடித்தது கிடையாது. ‘என்னடா! எப்ப பார்த்தாலும் உங்க வாத்தியாரு சிரிச்சுப் பேசிக்கிட்டே இருக்காரு? நீங்களும் சிரிக்கிறீங்க’ன்னு பெற்றோர்கள் கேட்பதாக மாணவர்கள் கூறுவார்கள்.

எனக்கு, உதவி தொடக்கக்கல்வி அதிகாரியாகப் பதவி உயர்வு கிடைத்தது. நான் அதை ஏற்கவில்லை. கடைசிவரை ஆசிரியராகவே பணியாற்றி ஓய்வு பெற்றேன். என்னிடம் படித்த பிள்ளைகள் ஆசிரியர்களாக, பேராசிரியர்களாக, அரசு அதிகாரிகளாகப் பணியாற்றுகிறார்கள். அதைவிட பெரிய மனநிறைவு எனக்கு வேறு என்ன இருக்க முடியும்? ஆசிரியர் பணி மிகவும் உன்னதமானது" என்று உருக்கத்துடன் கூறினார் முனுசாமி.


முனுசாமி, முந்தைய தலைமுறையைச் சேர்ந்த ஆசிரியர். ஆனால், இன்றைய தலைமுறை ஆசிரியர்கள் என்ன நினைக்கிறார்கள்?
"மற்ற எல்லா பணிகளையும்விட ஆசிரியர் பணிக்கு தனிச்சிறப்பு உண்டு. ஒவ்வொரு மனிதருக்கும் அடிப்படை அறிவைப் புகட்டுபவர்கள் ஆசிரியர்கள்தான். நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுகிற, பல்வேறு துறைகளில் சாதனை புரிகிற ஒவ்வொரு மனிதர்களின் வெற்றியிலும் ஆசிரியர்களின் பங்கு நிச்சயம் உண்டு. அந்த வகையில் ஆசிரியர் பணி என்பது பெருமைக்குரியது" என்கிறார், ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதிய, காரைக்குடியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை சரஸ்வதி.
ஆனாலும், கல்விச்சூழலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களால் ஆசிரியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.

"தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு (Continuous and Comprehensive Evaluation) என்று புதிய முறை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த முறையில், மாணவர்களுக்கு யோகாசனம், பாட்டு, நன்னெறி உட்பட பல திறமைகளையும் கற்றுத்தர வேண்டும். நல்ல விஷயம்தான். நிச்சயம் வரவேற்கக்கூடியதுதான். ஆனால், அது பற்றிய பதிவேடுகளை ஒவ்வொரு நாளும் ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டும். கல்வி அதிகாரிகள் திடீர் திடீரென புள்ளிவிவரங்களைக் கேட்கின்றனர். பாடம் நடத்துவதைக் காட்டிலும், பதிவேடுகளைப் பராமரிப்பதுதான் ஆசிரியர் பணி என்றாகிவிட்டது. வாரத்தில் ஒரு நாள் பாடம் நடத்துவதே பெரிய விஷயம் என்ற நிலைதான் இப்போது உள்ளது" என்று ஆதங்கப்படுகிறார், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் கண்ணன்.

கல்வித்துறையில் பல்வேறு நோக்கங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி, உரிய முறையில் திட்டமிட்டு செலவிடப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்படுவதும் ஆசிரியர்கள்தான். எப்படி?


"மாவட்டக் கல்வி அதிகாரியிடம் இருந்து எங்களுக்கு திடீரென எஸ்.எம்.எஸ். வரும். இன்று பிற்பகல் 3 மணிக்குள் பதிவேடுகளுடன் வரவேண்டும் என்று அதில் இருக்கும்.நான் ஒரு குக்கிராமப் பள்ளியில் பணியாற்றுகிறேன். 12 மணிக்கு கிளம்பினால்தான் 3 மணிக்குள் அங்கு போய்ச்சேர முடியும். மாதத்தில் பாதிநாள் இப்படி அலைந்து கொண்டிருந்தால் எப்படி என்னால் பள்ளியைக் கவனிக்க முடியும்? அந்த ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை ஒழுங்காகச் செலவிடாமல், அதை வருஷக் கடைசியில் எப்படியாவது செலவழித்தாக வேண்டும் என்ற நெருக்கடி அவர்களுக்கு. பிப்ரவரி, மார்ச் வந்து விட்டால் டிரெயினிங் டிரெயினிங் என்று எங்களை வாட்டி வதைக்கிறார்கள்" என்று புலம்புகிறார், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் ஒருவர்.

கல்வி போதிப்பது மட்டுமே ஆசிரியர்களின் பணி. ஆனால் இப்போது கல்விக்கு சம்பந்தமில்லாத பொறுப்புகளும் ஆசிரியர்களின் தலையில் சுமத்தப் படுவதாகக் குற்றச்சாட்டு எழுகிறது.

"சர்வ சிக்ச அபியான் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்குகிறது. அந்த நிதியில் புதிதாக ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்றால், அந்தக் கட்டுமானப் பணிக்கான முழுப்பொறுப்பும் தலைமையாசிரியர்தான். கட்டுமானப் பொருட்கள் வாங்குவது, பணிகளை மேற்பார்வையிடுவது, கணக்கு வழக்கு பார்ப்பது உட்பட எல்லா வேலைகளையும் தலைமையாசிரியர் செய்ய வேண்டும். அதுதவிர, கட்டிங் கொடு என்று அரசியல்வாதிகள் வந்துவிடுகின்றனர். இதுபோன்ற சூழலில், தலைமை ஆசிரியரால் பள்ளிக்கூடத்தை எப்படி நிர்வகிக்க முடியும்? தேவையில்லாத மனஉளைச்சலுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது" என்று பொருமுகிறார், மதுரையைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட தலைமையாசிரியர் ஒருவர்.

சினிமா, தொலைக்காட்சியின் தவறான கலாச்சாரத் தாக்கத்திற்கு ஆளாகியிருக்கும் மாணவர்களை சமாளிப்பது ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. சமீபத்தில் வாடிப்பட்டி அருகே பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளியில் இருந்த பெஞ்ச்சைத் திருடி விற்று, அதில் மது வாங்கிக் குடித்தனர் என்று ஓர் செய்தி வெளியானது. வகுப்பறைகளில் அம்மாதிரியான மாணவர்களைக் கையாளுவது ஆசிரியர்களுக்குபெரிய சவால்தான்.
"இப்போது கேமரா செல்போன், பள்ளி மாணவர்களிடம் சர்வசாதாரணமாகப் புழங்குகிறது. அது அவர்களை மிகத் தவறான பாதையில் இழுத்துச் செல்கிறது. ஒழுக்கம், ஆசிரியர்களுக்கு கீழ்படிதல் போன்ற பண்புகள் பொதுவாக இன்றைக்கு மாணவர்களிடம் அருகிவிட்டன. ஆசிரியர்களின் அறிவுரைகளை அவர்கள் மதிப்பதில்லை. ஆனால், மாணவர்களைத் திட்டாதீர்கள் என்று கல்வித்துறை அதிகாரிகள் எங்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள். இதுபோன்ற மாணவர்களை எப்படிச் சமாளிப்பது, அவர்களுக்கு எப்படிப் பாடம் சொல்லித் தருவது என்று எங்களுக்குப் புரியவேயில்லை" என்று வருத்தப்படுகிறார், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி தமிழாசிரியர் கல்யாணசுந்தரம்.

இவ்வளவு சவால்களுக்கு மத்தியிலும் அர்ப்பணிப்போடும், திறமையோடும் பணியாற்றி சிறந்த மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிலரைத் தேர்வு செய்து நல்லாசிரியர் விருது வழங்குகிறது நம் அரசு. ஆனால், நல்லாசிரியர் என்ற விருதுகளை எதிர்பாராமலேயே, எத்தனையோ ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு கல்விச் சேவையில் ஈடுபட்டுள்ளனர். அவ்வப்போது, அப்படிப்பட்ட பெருமைக்குரிய ஆசிரியர்கள் பலரின் சிறப்புகளை வெளியிட்டு நமது ‘புதிய தலைமுறை’யும் கௌரவித்து வருகிறது.

அதேவேளையில், ஆசிரியர்களின் சிலரது செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்கும், கண்டனத்துக்கும் உரியதாக உள்ளது. மாணவர்களை கண்மூடித்தனமாக அடிப்பது, பள்ளிக்கூடக் கழிவறைகளை சுத்தம் செய்யச் சொல்வது, சாதிய பாகுபாட்டுடன் நடந்துகொள்வது, மாணவ-மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பது எனத் தொடர்ச்சியாக வேதனைமிக்க பல சம்பவங்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. இத்தகைய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான பொறுப்பு கல்வித்துறைக்கு உண்டு என்றாலும், அதைக்காட்டிலும் தங்களுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது என்பதை உணர்ந்து, ஆசிரியர் அமைப்புகள் செயல்பட வேண்டியதும் மிக மிக அவசியம்.

No comments:

Post a Comment


web stats

web stats