பெரம்பலூர் மாவட்டத்தில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான சேர்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ. மகாலிங்கம். இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 6 முதல் 14 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தரமான இலவச தொடக்கக் கல்வி வழங்க வேண்டும். அனைத்து தனியார் சுயநிதி (மெட்ரிக் பள்ளிகள் உள்பட) சிறுபான்மையற்ற பள்ளிகளில் சேர விரும்பும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் பிரிவின் கீழ் உள்ள ஆதிதிராவிடர், மலைவாழ் பிரிவினர், மிகவும் பிற்பட்ட பிரிவினர், பிற்படுத்தப்பட்டட பிரிவினர், பெற்றோர் இல்லாத குழந்தைகள், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டோர், திருநங்கைகள், துப்புரவு தொழிலாளர் குழந்தைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினர் (ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்குள் பெறுவோர்) ஆகியோர் தகுதியானவர்கள். தொடக்க நுழைவு நிலை வகுப்பில் (எல்.கே.ஜி, முதல் வகுப்பு, 6-ம் வகுப்பு) 25 சதவீதத்தில் சேர அனுமதி கோருபவர்கள் எல்.கே.ஜி மற்றும் முதல் வகுப்பில் சேர விரும்பும் பள்ளியிலிருந்து 1 கி.மீட்டர் தொலைவுக்குள்ளும், 6-ம் வகுப்பில் சேர அனுமதி கோருபவர்கள் 3 கி.மீட்டர் தொலைவுக்குள்ளும் வசிப்பவராக இருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பப் படிவங்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகள் அல்லது முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பெற்று, பூர்த்தி செய்து உரிய அலுவலரிடம் தேவையான சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து மே 31-ம் தேதிக்குள் பெறப்பட்ட அலுவலகங்களிலேயே ஒப்படைக்க வேண்டும்.
குறிப்பிட்ட ஒதுக்கீட்டுக்கு மேல் விண்ணப்பங்கள் பெறப்பட்டால், குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் பிரிவினர் மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான இட ஒதுக்கீடு சிறுபான்மை பள்ளிகளுக்கு பொருந்தாது என்றார்.
No comments:
Post a Comment