மாநிலம் முழுவதும், 2,283 அரசு தொடக்கப் பள்ளி களில், 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கும் பணிகள், 42 கோடி ரூபாயில் துவங்க உள்ளன. தமிழக பள்ளிக் கல்வித் துறையில், அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த வரிசையில், அரசு பள்ளிகளில், கணினி வசதியுடன் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள, 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன.இந்நிலையில் புதிதாக, 2,283 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 42 கோடி ரூபாய் செலவில், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளன; இதற்கான பள்ளிகளை கணக்கெடுக்கும் பணி துவங்கி உள்ளது.
இது குறித்து, தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மாவட்ட வாரியாக, ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பள்ளிகளை தேர்வு செய்ய வேண்டும். ஒரு சரகத்திற்கு, ஐந்து பள்ளிகள் வரை, 403 சரகங்களில் தேர்வு செய்யலாம். இதன்படி, 75க்கும் மேல் மாணவர்கள் உள்ள தொடக்கப் பள்ளிகள்; 100 மாணவர்களுக்கு மேல் உள்ள நடுநிலைப் பள்ளிகளுக்கு, பட்டியலில் இடம் தர வேண்டும்.
கூடுதல் மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகளுக்கு, முன்னுரிமை தர வேண்டும். தரமான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும். வகுப்பறைகள் நல்ல முறையில் இருக்க வேண்டும். குடிநீர், கழிப்பறை, சுற்றுச்சுவர் மற்றும் மின் வசதிகள் இருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளின் படி, பள்ளிகளை தேர்வு செய்து, பட்டியல் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment