Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

அஞ்சல் துறை தேர்வு ரத்து: இணையதளத்தில் அறிவிப்பு


முறைகேடு நடந்திருக்கலாம் எனப் புகார் தெரிவிக்கப்பட்ட தபால் துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாக, தமிழ்நாடு அஞ்சல் வட்ட இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அஞ்சல் வட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட தபால்காரர் மற்றும் மெயில் கார்டு பணிக்கான தேர்வு 2016 டிசம்பர் 11-ஆம் தேதி நடத்தப்பட்டது. மெட்ரிக் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கல்வித் தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த எழுத்துத் தேர்வில் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுதினர். பொது அறிவு, கணிதம், ஆங்கிலம், தமிழ் என நான்கு பிரிவுகளிலும் தலா 25 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெற்றிருந்தன.

தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 14 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டன. தேர்வு எழுதியவர்களின் பதிவு எண்ணைக் கொடுத்து மதிப்பெண் விவரங்களைப் பெறும் வகையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.

மதுரையில் தேர்வு எழுதிய இளைஞர்கள் சிலர் தங்களது பதிவு எண்ணுக்கு முன்பு, பின்பு உள்ள எண்கள் என உத்தேசமாக சில எண்களைப் பதிவு செய்து தேர்வு முடிவைப் பார்த்தபோது அவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஹரியாணா உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த பலரும் தமிழில் 25-க்கு 24 மதிப்பெண்கள், சிலர் முழு மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். தமிழ் முழுமையான அறிமுகம் இல்லாத மாநிலத்தைச் சேர்ந்த பலரும், தமிழ் இலக்கணத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.

இதையடுத்து மதுரை மாநகராட்சி சூழல் பூங்கா மற்றும் காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து, தபால் துறை நடத்திய தேர்வில் சந்தேகம் இருப்பதாகவும், உண்மையாகத் தேர்வுக்குத் தயாராகி வரும் இளைஞர்களின் வாய்ப்புகள் பறிபோவதாகவும் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இத் தேர்வு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த நிலையில், 2016 டிசம்பர் 11-இல் நடத்திய தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அஞ்சல் வட்ட இணையதளத்தில் (www.dopchennai.in) அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரான மதுரையைச் சேர்ந்த ஆர்.கருப்பசாமி கூறியதாவது:

போட்டித் தேர்வுகளின் மூலம் அரசுப் பணிக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கடுமையாகப் பயிற்சி எடுத்து வருகிறோம். தற்போது தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தாலும், முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். இதுபோன்ற முறைகேடுகள் எங்களது கனவுகளைத் தகர்த்து விடுகிறது. முறைகேடுகளில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அதுகுறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இதன் மூலம் இனி வரும காலங்களில் இத்தகைய முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்றார்.

No comments:

Post a Comment


web stats

web stats