ஜெயலலிதாவை, 'ஆன்ட்டி' என்று அன்போடு அழைத்த பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபீதாவை இடம் மாற்றியதில் பல்வேறு உள்விவகாரங்கள் இருப்பதாக, தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. சபீதா, செயலாளராக இருந்த காலகட்டத்தில், 7 அமைச்சர்கள் மாற்றப்பட்டுள்ளனர். எட்டாவது அமைச்சரான செங்கோட்டையன் நியமிக்கப்பட்ட நேரத்தில், சபீதா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவாலும் மாற்றப்பட்டுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அதிரடிகள் தொடங்கிவிட்டன. ஆளும்கட்சிக்கு வேண்டப்பட்டவர்களுக்கு முக்கியத்துவமும், வேண்டாதவர்கள் விரட்டப்படும் படலமும் அரங்கேறி வருகின்றன. இதில், ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்தவர்களுக்குக்கூட 'கல்தா' கொடுக்கப்பட்டுள்ளன. உள்துறை முதன்மைச் செயலாளராக இருந்த அபூர்வ வர்மா, சில நாள்களுக்கு முன்பு மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக, நிரஞ்சன் மார்டி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றத்தையடுத்து, தமிழக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடப்பெயர்ச்சி நடந்துள்ளது. முதல்வராக ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில், அவருடன் அதிக நெருக்கமாக இருந்த ஐ.ஏ.எஸ் பெண் அதிகாரிகளில் ஒருவர், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபீதா. பாரம்பர்யமிக்க குடும்பத்திலிருந்து வந்த சபீதா, ஜெயலலிதாவை 'ஆன்ட்டி' என்று அழைக்கும் உரிமையைப் பெற்றிருந்தார். இதனால், தலைமைச்செயலகத்தில் அசைக்கமுடியாத சக்தியாக சபீதா செயல்பட்டுவந்தார். இதன் விளைவு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்கள், சபீதாவால் பந்தாடப்பட்ட கதையும் அ.தி.மு.க. ஆட்சியில் நடந்தது. சபீதாவுடன் மல்லுக்கு நின்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்களில் சிலருக்கு கல்தாவும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் பள்ளிக் கல்வித்துறை என்றாலே அமைச்சர்களுக்குள் ஒருவித பயம் ஏற்பட்டது. அதே நேரத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவி பவர்ஃபுல் என்பதால், அதையும் சிலர் விரும்பிப்பெற்று, வில்லங்கத்தைத் தேடியவர்களும் உண்டு.
கடந்த 2011-ம் ஆண்டு, ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சி.வி.சண்முகம், சிவபதி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வைகைச் செல்வன், கே.சி.வீரமணி என ஐந்து பேர் பள்ளிக் கல்வித்துறைக்கு அடுத்தடுத்து அமைச்சர்களாகினர். இதற்குப் பின்னணியில் சபீதா என்ற பெயரை அனைவரும் சொல்கின்றனர். 2016ல் மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி அமைந்ததும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரானார் பெஞ்சமின். அடுத்து மாஃபா பாண்டியராஜன் அமைச்சரானார். ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சர்களுக்கு இடப்பெயர்ச்சி என்பது சர்வசாதாரணம்தான். அதிலும், பள்ளிக் கல்வித்துறை, வணிகவரித்துறையில் அடிக்கடி அமைச்சர்கள் இடமாறுதல் செய்யப்பட்டனர். அமைச்சர்கள் மாறினாலும், இந்தத் துறையின் முதன்மைச் செயலாளராக சபீதா 6 ஆண்டுகளுக்கு மேல் இருந்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரால் ஜெயலலிதாவை நேசித்த சபீதா, இப்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதுவும் டம்மி பதவியான சிமென்ட் கழக நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளராக உதயசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க.வின் சீனியர் அமைச்சர் ஒருவரின் சிபாரிசின் பேரில் உதயசந்திரனுக்கு இந்தப் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இவர், டி.என்.பி.எஸ்.சி-யில் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில்தான், இணையதளம்மூலம் அரசுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறையை அமல்படுத்தினார்.
இதுகுறித்து தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகையில், "கடந்த 1991-ம் ஆண்டு, முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்தபோது, அவரது அலுவலக துணைச் செயலாளர் அந்தஸ்தில் பணியாற்றியவர் சபீதா. இதனால், ஜெயலலிதாவின் குட்புக்கில் சபீதா இடம்பிடித்தார். அந்தக் காலகட்டத்தில், முதல்வர் அலுவலகச் செயலாளர்களில் ஒருவரான ராம்மோகனராவிடமும் சபீதாவுக்கு தயவு கிடைத்தது. இதனால், பள்ளிக் கல்வித்துறைச் செயலாளராக சபீதா நியமிக்கப்பட்டார். ராம்மோகன ராவ் தலைமைச் செயலாளரானதும் பள்ளிக் கல்வித்துறையில் சபீதா வைத்ததுதான் சட்டம் என்ற நிலை ஏற்பட்டது. பள்ளிக் கல்வித்துறையில் நிகழ்ந்த பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சபீதாவின் பெயரும் அடிப்பட்டது. குறிப்பாக, ஆசிரியர் இடமாறுதலில் பள்ளிக் கல்வித்துறையில் 'எம்', 'எஸ்' என்ற பெயர்களில் இரண்டு சிபாரிசு லிஸ்ட்கள் பின்பற்றப்படும். 'எம்' லிஸ்ட் என்பது அமைச்சர் தரப்பிலிருந்து வரும் சிபாரிசுகளுக்கும், 'எஸ்' லிஸ்ட் என்பது செயலாளர் தரப்பிலிருந்து வரும் சிபாரிசுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். சபீதா இருந்த காலகட்டத்தில் 'எஸ்' லிஸ்ட்களுக்கு மட்டுமே பள்ளிக் கல்வித்துறை முக்கியத்துவம் கொடுத்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறையில் இயக்குநராக இருந்த சீனியரான ஒருவரை, விதிமுறைகளை மீறி இடம்மாற்றிவிட்டு, அவரைவிட ஜூனியரை நியமித்த வரலாறும் உள்ளது. இதனால், கடவுள் பெயரைக் கொண்ட அந்த இயக்குநர், அமைச்சர்களின் சிபாரிசுகளைக்கூட சபீதாவின் உத்தரவு இல்லாமல் செயல்படுத்துவதில்லையாம். கடந்த ஆட்சியின்போது, நீதிமன்றத்தில் கடும் கண்டனத்துக்குரிய துறையாக பள்ளிக் கல்வித்துறை இருந்துள்ளது. கடந்த பிளஸ் 2 தேர்வின் போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அருகில், அமைதியாக நின்றுகொண்டிருந்தார் சபீதா. அப்போதே, அவருக்கு இடமாறுதல் தகவல் சென்றுவிட்டது. சபீதாவின் இடமாறுதல், ஆளுங்கட்சியினர் மட்டுமல்லாமல் தலைமைச் செயலகத்திலேயே ஒரு தரப்பினருக்குக் கடும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது" என்றனர்.
தலைமைச் செயலக ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், "நீண்ட காலமாக சபீதா, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளராக இருக்கிறார். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், பள்ளிக் கல்வித்துறையிலிருந்து முதல்வர் அலுவலகத்தில் முக்கியப் பதவி சபீதாவுக்கு கிடைத்திருக்கும். ஆனால், ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டார். இறுதி அஞ்சலி நிகழ்ச்சியின்போது, அவரது உடல் அருகிலேயே இருந்து அனைத்து காரியங்களையும் முன்னின்று செய்தவர் சபீதா. அவரது மறைவுக்குப் பிறகு சபீதாவுக்கு தலைமைச்செயலகத்தில் செல்வாக்கு குறைந்தது. குறிப்பாக, ராமமோகன ராவிடம் செல்வாக்கைப் பெற்ற சபீதாவை இடம் மாற்ற, ஏற்கெனவே பல முயற்சிகள் நடந்தன. இந்தத் தடவைதான் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக கல்வித்துறையில், குறிப்பிடும் வகையில் புதிய திட்டங்கள் இல்லை. இன்றைய கல்வித்தரத்துக்கு ஏற்ப புதிய மாற்றங்களை உதயசந்திரன் மூலம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. 'நீட்' போன்ற நுழைவுத் தேர்வுக்கு அடிப்படையாக பள்ளிக் கல்வித்துறையிலும், உயர்கல்வித்துறையிலும் மாற்றங்கள் கொண்டு வருவதற்கான முன்னேற்பாடே இந்தப் பள்ளி, உயர்கல்வி ஆகிய துறைகளின் செயலாளர்கள் மாற்றம்" என்றார்.
- எஸ்.மகேஷ்
No comments:
Post a Comment