Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஆசிரியர் தகுதித்தேர்வும் சலுகைகளும்

இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கான சுதந்திரப் பிரகடனமாக, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் ஆகஸ்டு 26, 2009 இல்  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்குவந்து 60 ஆண்டு காலத்திற்குப் பின்னர் இச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுவுங்கூட, 2002இல் பாராளுமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் சட்டத்தின் 86ஆவது திருத்தம் இதற்கு உந்துதலாக இருந்தது.
இவ்விரண்டு சட்டங்களும் 6வயது முதல் 14வயதுவரையில் உள்ள இந்தியக் குழந்தைகள் இலவசமாகவும் கட்டாயமாகவும் தொடக்கக் கல்வியைப் பெற உறுதியளிக்கின்றன. இச்சட்டம் 2010, ஏப்ரல் முதல் நாளிலிருந்து நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது
.
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009இல் அனைத்து மாநிலங்களும் மேற்கொள்ள வேண்டிய பாடத் திட்டம், தேர்வுகள், ஆசிரியர் கல்வித் தகுதி, நியமன முறைகள் போன்ற திட்டச் செயலாக்கக் கூறுகள் கூறப்பட்டுள்ளன.
நாடு முழுவதிலும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் சீரான ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம், மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம், மதிப்பீட்டு முறைகள் என்னும் இலக்குகளுடன் குழந்தைகளுக்குத் தரமான தொடக்கக் கல்வி கிடைக்க வேண்டுமென இச்சட்டம் எதிர்பார்க்கிறது. பள்ளிகளில் தரமான கல்வியை வழங்கவும் அதில் சவால்களை ஏற்றுத் தீர்வு காணவும் தகுந்த மனப்பக்குவமும் மீத்திறனும் கொண்ட ஆசிரியர்களையே பணியில் நியமிக்க வேண்டும் என்பது சட்டத்தின் குறிக்கோள்.
பல மாநிலங்களில் தகுதி குறைந்த, போதுமான பயிற்சியில்லாத ஆசிரியர்களின் பணியால் தொடக்கக் கல்விநிலை சீர்குலைந்துள்ளது என்பது கல்வியாளர்களின் பொதுக்கருத்தாகும். இந்நிலையைப் போக்க 1973 முதல் செயல்பட்டுவரும் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம், 1995 முதல் தனியதிகாரம் பெற்ற அமைப்பாகச் செயலாற்றி வருகிறது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இக்குழுமம் ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை கற்பிக்கும் ஆசிரியர்களின் குறைந்தபட்ச கல்வித்தகுதியை நிர்ணயம் செயயவும், ஆசிரியர்களைத் தேர்வு செய்ய நாடு முழுவதற்கும் ஒரேமாதிரியான தகுதித் தேர்வை வடிவமைத்துத் தரவும் அதிகாரம் பெற்ற அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை நடத்துவது  மாநில அரசின் விருப்பமன்று. அது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் தந்த தவிர்க்க இயலாத திட்டமாகும்.
தமிழ்நாடு அரசு, கட்டாயக் கல்விச் சட்டத்தையேற்று, 2011இல் அதற்குரிய விதிமுறைகளை வகுத்து வெளியிட்டது. அதன்படி, தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான தகுதித் தேர்வை அறிவித்தது.
தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் இவ்விருவகை ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் கலந்துகொள்ள குறைந்த அளவு 45 சதவீதம் வரை மதிப்பெண் பெற்றிருக்க வேண்டுமென அறிவித்துள்ளது. பல மாநிலங்களின் வேண்டுகோளுக்கிணங்க இதில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீதம் சலுகை வழங்க இக்குழுமம் அனுமதி வழங்கியுள்ளது (என்சிடிஇ கடிதம் 1-4-2011, 61-1-2011). அதன்படி தமிழ்நாடு அரசு, மேனிலைத் தேர்வில் தேர்ச்சிக்குரிய 35 சதவீதம் மதிப்பெண் பெற்ற இடைநிலையாசிரியர்களையும், தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் பட்டம் வழங்க நிர்ணயித்துள்ள குறைந்த அளவு மதிப்பெண்பெற்ற பட்டதாரி ஆசிரியர்களையும் தகுதித் தேர்வுக்கு அனுமதித்தது.
தமிழ்நாட்டில் 2012, ஆகஸ்டில் முதன்முதலாக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் இடைநிலை ஆசிரியர் பணிக்காக 2.8 லட்சம் பேரும், பட்டதாரி ஆசிரியர் பணிக்காக 3.8 லட்சம் பேரும் கலந்துகொண்டனர். இத்தேர்வில் வெற்றிபெற 60 சதவீதம் மதிப்பெண் தேவை என்னும் தேசிய ஆசிரியர் கல்விக் குழும விதிமுறைகளின்படி, தேர்வெழுதிய 6.6 லட்சம் பேரில் 2448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மாநிலத் தேர்ச்சி 0.4 சதவீதமாக இருந்தது கல்வியாளர்களைத் திகைக்கச் செய்தது. இத்தேர்ச்சி தேசிய சராசரியை விட மிகக் குறைந்திருந்தது.
அரசு அறிவித்த பணியிடங்களின் எண்ணிக்கைக்கேற்ப தேர்ச்சி பெற்றவர்கள் கிடைக்காததால், முதல் தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணிநியமனம் கிடைத்தது. எஞ்சியிருந்த பணியிடங்களை நிரப்ப தகுதிபெற்ற ஆசிரியர்கள் கிடைக்கவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள்.
இக்குறையை களைய, உடனடியாக ஆசிரியர்களை நியமிக்கவும், தேர்வில் தோல்வியுற்றவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்கத் தேர்வு நேரத்தை 3 மணியாக்கி அவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத வாய்ப்பு வழங்கவும் எண்ணிய அரசு, 2012, அக்டோபரில் மறுதேர்வு நடத்தப்படுமென அறிவித்தது. இத்தேர்வில் 6.5 லட்சம்பேர் பங்கேற்ற போதிலும் 3 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதிலும் பணியிடங்கள் முழுவதையும் நிரப்ப முடியவில்லை. மறுதேர்வில் வெற்றி பெற்றவர்கள் பெரும்பாலோர் நியமனம் பெற்றனர்.
இந்த நியமனத்தின்போது, இடைநிலையாசிரியர்கள், வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள், தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையிலும் (வெயிட்டேஜ்) தேர்வு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இருந்த பணியிடங்களை நிரப்புவதற்காக, தமிழ்நாடு அரசு 2013இல் இருவகை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை அறிவித்தது. மாநிலம் முழுவதுமாக 2013 ஆகஸ்டு மாதத்தில் நடைபெற்ற இத்தேர்வில் 6.6 லட்சம் பேர் பங்கேற்றனர். ஆனால் தேர்ச்சி மட்டும் மாறாமல் சிலைமேல் எழுத்தாக 4 சதவீதமாகவே இருந்தது. இதில் 12596 இடைநிலையாசிரியர்களும் 14500 பட்டதாரி ஆசிரியர்களும் 60 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்று, நியமனத்திற்காக காத்திருக்கின்றனர்.
இதனிடையே, தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள், தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை வழங்க வேண்டுமென்னும் கருத்தை சட்ட மன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஓங்கி ஒலித்தன. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய அதிகாரியும் இதே கருத்தை அண்மையில் வெளியிட்டார்.
கடந்த வாரம் கூடிய சட்டமன்றக் கூட்டத்தில் உயர்கல்வி அமைச்சர், தகுதித் தேர்வில் மதிப்பெண் குறைக்கும் எண்ணம் அரசுக்கு இலலையென்றும், அது தொடக்கக் கல்வியின் தரத்தை பாதிக்கும் என்றும் அறிவித்தார். ஆனால் ஓரிரு நாள்களுக்குப்பின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டில் தகுதித் தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பழஙகுடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) சீர்மரபினர், மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருககு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படுமென அறிவித்துள்ளார்.
மாநில அரசுகள் விரும்பினால் ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை வழங்கலாமென தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் தனது வழிகாட்டுதல் குறிப்பில் (என்.சி.டி.இ. கடிதம் 11-2-20011, 76-4, 2010) சுட்டிக்காட்டியுள்ளது. இதனடிப்படையிலேயே மதிப்பெண் சலுகை கிடைத்துள்ளது. இதனால் மாநிலத்தில் பல ஆயிரம்பேர் கூடுதலாகத் தேர்ச்சிபெறும்நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற மதிப்பெண் சலுகை கேரளா, கர்நாடகம், மேற்குவங்காளம், குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் வழங்கப்படவில்லை. இம்மாநிலங்களில் தேர்ச்சிபெற 60 சதவீத மதிப்பெண் வாங்கியாக வேண்டும். இத்துடன், தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனத்தின்போது வழக்கம்போல 69 சதவீத இட ஒதுக்கீட்டுமுறை பின்பற்றப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், தமிழக அரசியல்வாதிகள் ஆந்திராவில் உள்ளதுபோல ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க வேண்டும் என அறிக்கை வெளியிடுகின்றனர். சாதிகளைத் தாங்கிப் பிடிக்கும் அரசியல்வாதிகள், அதனால் தரமான, நிறைவான கல்வி குறைபட்டுப்போகுமென தெரிந்திருந்தும் வேண்டுமென்றே குரல் கொடுப்பது வேதனை யளிப்பதாக உள்ளது.
தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டுப் பிரிவினர், தற்போது தகுதித் தேர்வை எழுதுவதற்கான அடிப்படைக் கல்வித் தகுதியிலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவும் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் அனுமதியோடு ஒவ்வொன்றிற்கும் 5 சதவீத மதிப்பெண் சலுகையைப் பெற்றுள்ளனர். அத்துடன் மாநிலத்தில் ஏற்கனவே நடைமுறையில் உளளவாறு இப்பிரிவினர் 69 சதவீத இட ஒதுக்கீடு பெறவும் முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். இதுதான் உண்மை நிலை. இது ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை அடித்தது போன்றதாகும்.
கேரளா போன்ற மாநிலங்கள் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளுக்கும் தகுதித் தேர்வு மூலமாகவே ஆசிரியர்களைத் தேர்வு செய்கின்றன. தகுதி தேர்வு தேவையில்லை, வினாத்தாள் கடினம், நேரம் போதவில்லை, மதிப்பெண் சலுகை வேணடல் என்பதெல்லாம் ஆசிரியர்கள் தம்மைத் தாமே வலிமையற்றவர்களாக்கிக் கொள்ளும் வழிகளாகும்.
சலுகைகளைப் பெற்றாலும் ஆசிரியப் பணிக்கு வருவோர் தத்தம் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். நாட்டின் எதிர்காலம் பள்ளிகளின் வகுப்பறைகளில் உருவாக்கப்படுகிறது என்னும் உயர்ந்த நோக்கத்தை மனதில்கொண்டு பணியாற்ற வேண்டும்.
கட்டுரையாளர்: தமிழாசிரியர் (ஓய்வு).

No comments:

Post a Comment


web stats

web stats