தேசிய நுழைவு தேர்வுகளை, அரசு பள்ளி மாணவர்கள் சந்திக்கும் வகையில், ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலை பேராசிரியர்கள் சார்பில், தமிழக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், உயர் கல்வியில் சேர, பல்வேறு நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பல படிப்புகளுக்கு, 50க்கும் மேற்பட்ட நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், தமிழக மாணவர்கள் குறைந்த அளவே தேர்ச்சி பெறுகின்றனர். இந்த நிலையை மாற்றி, தமிழக மாணவர்கள், உயர் கல்வியில் எளிதாக இடங்களை பெறும் வகையில், நுழைவு தேர்வுக்கு மாணவர்கள் தயார்படுத்தப்படுகின்றனர்.
இதன் முதற்கட்டமாக, 14 ஆண்டு பழமையான பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. அதைத் தொடர்ந்து, ஆசிரியர்களின் கற்பித்தல் முறையை மாற்றவும், தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தற்போது, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது. இந்த பயிற்சி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, போதிய பலன் தரவில்லை. மேலும், கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன விரிவுரையாளர்களில் பலர், நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாறவில்லை.
எனவே, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, துறையில் சிறந்த வல்லுனர்கள் சார்பில், பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தேசிய கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., பேராசிரியர்கள், அண்ணா பல்கலை பேராசிரியர்கள், அனுபவம் பெற்ற அறிவியலாளர்கள், நுழைவு தேர்வு வினாத்தாள் தயாரிப்பில் இடம்பெறும் ஆசிரியர்கள் ஆகியோர், சிறப்பு பயிற்சி அளிக்க உள்ளனர்.
No comments:
Post a Comment