உதயச்சந்திரன் கல்வித்துறைச் செயலாளராக பதவியேற்கிறார் என்று தெரிந்தந்திலிருந்தே மகிழ்ச்சியாக இருந்தது. இன்றைக்கு தமிழகத்தில் அதிகளவிலான சீரமைப்புத் தேவைப்படுகிற துறை அதுதான் அல்லவா?. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிகார மட்டத்தினால் வழங்கப்பட்ட சலுகைகளின் காரணமாக அரசுப்பள்ளிகள் அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றன. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களைக் கண்டிக்கக் கூடாது, மிரட்டக் கூடாது என்று ஆயிரத்தெட்டுக் கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் தனியார் பள்ளிகளில் எதையும் கண்டுகொள்ளமாட்டார்கள். அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் மாணவர்களைச் சித்ரவதை செய்வார்கள். மாணவர்களை ப்ராய்லர் கோழிகளாக மாற்றி இரவு பகல் பாராமல் கண்விழிக்கச் செய்து மதிப்பெண்களைக் கக்க வைத்துவிடுவார்கள். நம் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடிச் செல்வதன் முக்கியமான காரணமே இதுதான். ‘அங்க மார்க் வாங்க வெச்சுடுறாங்க’ என்பார்கள்.
ஏன் வாங்க வைக்க முடியாது? தனியார் பள்ளிகளில்தான் ப்ளஸ் ஒன்னிலிருந்தே ப்ளஸ் டூ பாடத்தைத்தானே படிக்கிறார்கள். இரண்டு வருடங்களாக உருவேற்றப்படும் அவர்கள் அதிக மதிப்பெண்கள் வாங்குவார்களா அல்லது ஒரேயொரு வருடம் மட்டும் எந்தக் கண்டிப்புமில்லாமல் பனிரெண்டாம் வகுப்புப் பாடங்களைப் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் மதிப்பெண்கள் வாங்குவார்களா? இத்தகைய தகிடுத்தங்களுக்கு முட்டுக்கட்டை போடும்விதமாக பதினொன்றாம் வகுப்பையும் பொதுத்தேர்வாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை கல்வித்துறையில் தொடங்கியிருக்கிறார்கள். ப்ளஸ் டூ பாடத்தை ப்ளஸ் டூவில் மட்டும் படிக்கட்டும். அற்புதமான நடவடிக்கை இது. ஆயிரம் கும்பிடு போடலாம்.
தனியார் பள்ளிகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்கப்படும் சலுகைளை ஒழுங்குபடுத்தி வழிக்குக் கொண்டுவந்தாலே போதும். அரசுப்பள்ளிகள் ஜொலிக்க ஆரம்பித்துவிடும்.
தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளி ஆசிரியர்களைவிடவும் எந்தவிதத்திலும் மோசமானவர்கள் இல்லை. ஆனால் அவர்களது கைகளை அவிழ்த்துவிட வேண்டும். மாதம் ஒரு முறையாவது ‘பயிற்சி’ என்று அவர்களை அழைத்து வைத்து கல்வி அதிகாரிகள் தாளிக்கிறார்கள். ஆசிரியர்களிடம் பேசினால் கதறுகிறார்கள். பெரும்பாலானவை தேவையற்ற பயிற்சிகள் அல்லது தூக்கம் வரவழைப்பவை. ஆசிரியர்களுக்கு வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு உருப்படியான பயிற்சிகளைக் கொடுத்தால் போதும். பயிற்சியரங்கில் எதைச் சொல்லித் தர வேண்டும், சொல்லித்தருகிற ஆளுமை யார் என்பதையெல்லாம் தெளிவுடன் வடிவமைத்து பயிற்சிகளின் எண்ணிக்கையைக் குறைத்து ஆசிரியர்களை கற்பித்தல் பணியில் கவனம் செலுத்தச் செய்வதுதான் இன்றைக்கு முக்கியமான காரியமாகத் தெரிகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் இப்பொழுதெல்லாம் ஊழியர்களுக்கான பயிற்சிகளை மிகத் தெளிவாகத் திட்டமிட்டுச் செயல்படுத்துகின்றன. பயிற்சிகளின் எண்ணிக்கையைவிடவும் effective என்பதில்தான் குறியாக இருக்கிறார்கள். அதையே அரசுத்துறைகளும் பின்பற்றினால் சிறப்பாக இருக்கும்.
உதயச்சந்திரன் சவாலான தருணத்தில்தான் கல்வித்துறைக்கு பொறுப்பேற்றிருக்கிறார். சிபிஎஸ்இ பாடங்களுக்கு இணையாக தமிழக பாடத்திட்டங்களை மாற்றுவது, நீட் தேர்வு உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகளை எதிர்கொள்ள நம்மிடம் இருக்கும் தடைகளைக் கண்டறிதல் (Gap analysis) என நிறைய வேலைகள் இருக்கின்றன. ஆனால் அவரால் இந்தத் துறையில் மறுமலர்ச்சியை உண்டாக்கிவிட முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. சமீபத்தில் ஆசிரியர்களின் சங்கங்களை அனைத்து ‘இந்தத் துறையில் என்ன தேவை?’ என்று எழுத்துப் பூர்வமாக எழுதித் தரச் சொல்லியிருக்கிறார். மேல்மட்ட அதிகாரியொருவர் இறங்கி வந்து பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதற்கான எத்தனங்களைத் தொடங்குவதே பாஸிடிவ்வான விஷயம்.
கல்வித்துறையில் செயலராக உதயச்சந்திரன், இயக்குநர்களாக செ.கார்மேகம், இளங்கோவன் உள்ளிட்டவர்கள் இணைந்த அற்புதமான அணி அமைந்திருக்கிறது. அவர்களுக்கான சுதந்திரத்தை அரசு வழங்கினால் பெருமளவு சீரமைப்புகளைச் செய்துவிடுவார்கள். நம்பிக்கை துளிர்த்திருக்கிறது. தமக்குக் கீழாக இத்தகையதொரு அணியை அமைத்துக் கொண்ட அமைச்சருக்கும் வாழ்த்துக்கள். கல்வித்துறையைக் காப்பாற்றுங்கள் அய்யா! இன்றைக்கு அதுதான் சீரழிந்து சின்னாபின்னமாகிக் கிடக்கிறது.
No comments:
Post a Comment