மருத்துவப் பட்ட மேற்படிப்புகளில் மருத்துவ கவுன்சில் விதிப்படி அரசு மருத்துவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கவுன்சில் விதிப்படி அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு மற்றும் கூடுதல் மதிப்பெண் தர முடியாது என்றுசென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் தமிழக அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது என்றும் நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.இந்த வழக்கில் ஏற்கனவே இரு நீதிபதிகள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்திருந்த நிலையில், 3வது நீதிபதியாக விசாரித்த சத்தியநாராயணன், இரண்டு நீதிபதிகளில் ஒருவரான எஸ்எம்.சுப்ரமணியத்தின் தீர்ப்பைஉறுதி செய்துள்ளார்.
வழக்கின் பின்னணி
முன்னதாக அரசு மருத்துவர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தமிழகத்தில் மருத்துவ பட்டமேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளை பின்பற்றி நடத்த கடந்த மாதம் உத்தரவிட்டார்.இதனால் தமிழகத்தில் மருத்துவ பட்டமேற்படிப்பு சேர்க்கையை மருத்துவ கவுன்சில் விதிகளை பின்பற்றி நடத்துவதா? இல்லை தமிழக அரசின் விளக்கக் குறிப்பேட்டின்படி நடத்துவதா? என்பதில் சட்ட சிக்கல் எழுந்தது.
மருத்துவர்கள் போராட்டம்
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், தங்களுக்கான சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தமிழகம் முழுவதும் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பான வேறு ஒரு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கிருபாகரன் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தை கைவிட அறிவுறுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) அவர்கள் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டனர்.
மாறுபட்ட கருத்து
இது தொடர்பாகத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு இரு நீதிபதிகள் அமர்வுக்கு வந்தது. மே 3-ம் தேதி இருவரும் தீர்ப்பளித்தனர். நீதிபதி கே.கே.சசிதரன் தனது தீர்ப்பில், ‘‘மருத்துவ பட்டமேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை தமிழக அரசின் விளக்கக் குறிப்பேட்டை பின்பற்றி நடத்திக்கொள்ள தமிழக அரசுக்கு முழுஅதிகாரம்உள்ளது. தமிழக அரசின் விளக்கக் குறிப்பேடு மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு முரணாக இல்லை’’ என தீர்ப்பளித்தார்.ஆனால் நீதிபதி கே.கே.சசிதரனின் தீர்ப்பிற்கு முரணாக நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தீர்ப்பளித்தார். ‘‘மருத்துவ பட்டமேற்படிப் புக்கான மாணவர் சேர்க்கை என்பது நாடு முழுவதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும். எனவே தமிழகத்தில் மருத்துவ பட்டமேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளைப் பின்பற்றி வரும் மே 7-ம் தேதிக்குள் தரவரிசை பட்டியல் தயாரித்து அதன் அடிப்படையில் கலந்தாய்வை திட்டமிட்டபடி நடத்த வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.நீதிபதிகள் இருவரும் தங்களுக்குள் மாறுபட்ட தீர்ப்பைக்கூறியதால் இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் விசாரித்து வந்தார். அதன் தீர்ப்பு இன்று வெளியானது.இந்நிலையில் மூன்றாவது நீதிபதியுடைய உத்தரவின் அடிப்படையில் கிராமப் புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு மதிப்பெண் சலுகை வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மருத்துவர் சங்கம் வருத்தம்
நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மருத்துவர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கே முன் மாதிரியாக கடந்த 27 ஆண்டுகள் தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வந்த இட ஒதுக்கீடு நடைமுறை இந்த தீர்ப்பால் ரத்தாவது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக மருத்துவ சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment