நாட்டின் புதிய கல்விக் கொள்கையை இறுதி செய்ய, விண்வெளி விஞ்ஞானி கே.கஸ்தூரி ரங்கன் தலைமையில், ஒன்பது உறுப்பினர் அடங்கிய குழுவை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை நியமித்துள்ளது.
புதிய கல்வி கொள்கை உருவாக்க குழு
நாட்டின் கல்விக் கொள்கையை மாற்றியமைக்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான பிரகாஷ் ஜாவடேகர் திட்டமிட்டுள்ளார். இதற்காக, பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற, ஒன்பது உறுப்பினர்கள் உடைய குழுவை, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கி உள்ளது.
100 சதவீதம்
இந்த குழுவுக்கு, விண்வெளி விஞ்ஞானியும், ’இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவருமான, கஸ்தூரி ரங்கன் தலைமை வகிப்பார்.
இந்த குழுவில் இடம் பெற்றுள்ள, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அல்போன்ஸ் கானாம்தனம், கேரளாவின் கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்கள், 100 சதவீத கல்வியறிவை எட்ட முக்கிய காரணியாக திகழ்ந்தவர். இந்த குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் ஒருவரான, ராம்சங்கர் குரீல், ம.பி.,யில் உள்ள பாபாசாகேப் அம்பேத்கர் பல்கலை துணைவேந்தர். இவர், விவசாயஅறிவியல் மற்றும் மேலாண்மையில் அனுபவம் வாய்ந்தவர்.
இரண்டாவது முறை
குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள், பல்வேறு பிராந்தியங்களையும், பிரிவுகளையும் சேர்ந்தவர்கள்; பல துறைகளில் ஆழ்ந்த, உலகளாவிய அனுபவம் பெற்றவர்கள். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்த பின், கல்விக் கொள்கை அமைப்பதற்காக, இரண்டாவது முறையாக குழு அமைக்கப்பட்டுள்ளது.
மனிதவள மேம்பாட்டு அமைச்சராக, ஸ்மிருதி இரானி இருந்தபோது, புதிய கல்விக் கொள்கை உருவாக்க, 2015ல், முன்னாள் கேபினட் செயலர், டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் தலைமையில், குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு, 2016, மே 7ம் தேதி, தற்போதைய மனிதவள மேம்பாட்டுஅமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம், அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் இடம்பெற்றிருந்த சில பரிந்துரைகள் பிற்போக்கானவை என்ற புகார் எழுந்ததால், பல்வேறு அரசியல் கட்சிகள், கல்வி நிறுவனங்களிடம், ஜாவடேகர் ஆலோசனைகளை கோரினார்.
இந்த நிலையில், புதிய கல்விக் கொள்கையை இறுதி செய்ய, கஸ்தூரி ரங்கன் தலைமையில் தற்போது நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில்...
கடந்த 1968ல், நாட்டின் முதல் கல்விக் கொள்கை, அப்போதைய பிரதமர் இந்திராவால் அமல்படுத்தப்பட்டது. அதன் பின், 1986ல், பிரதமராக பதவி வகித்த ராஜிவ், இரண்டாவது முறையாக, கல்விக் கொள்கையை அமல்படுத்தினார். அவரைத் தொடர்ந்து, 1992ல், நரசிம்ம ராவ் தலைமையிலான மத்திய அரசு, கல்விக் கொள்கையில் சில திருத்தங்களை மேற்கொண்டது. 2005ல், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, குறைந்தபட்ச பொது கொள்கை அடிப்படையில், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியது.
No comments:
Post a Comment