Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஆசிரியர் அமைப்புகளை தமிழக அரசே நினைத் தாலும் தடைசெய்ய முடியாது ; கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு), உயர் நீதிமன்றம், சென்னை !!!

மீண்டும் ஒரு முறை சென்னை உயர் நீதிமன்றம் தனது கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளது. இம்முறை பள்ளிக் கல்விக் குறைபாடுகளைக் களையும் பொருட்டு அரசிடம் 20 கேள்விகளை நீதிபதி எழுப்பியுள்ளார். வழக்கு மறுபடியும் விசாரணைக்கு ஜுலை 14 அன்று வரவுள்ளது. அதற்குள் அரசு தனது பதில்களை அளிக்குமா அல்லது வழக்கு மறுபடியும் தள்ளிப்போடப்படுமா என்பது தெரியாது. மேலும், ஜுலை 3 முதல் நீதிபதிகள் விசாரிக்கக் கூடிய 
வழக்குகளின் பட்டியல் மாறிவிடும் என்பதனால் அவரே இவ்வழக்கைத் தொடர்ந்து நடத்துவாரா என்றும் தெரியவில்லை.


பள்ளிக் கல்வித் துறையிலுள்ள சீர்கேடுகளைக் களைந்து மாணவர்களுக்குத் தரமான கல்வி அளிக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு என்பதில் எவ்விதக் கருத்து வேறுபாடும் யாருக்கு இருப்பதற்கில்லை. ஆனால், கல்வி உலகத்தில் இருக்கக்கூடிய அத்தனை அழுக்குகளையும் வெளுக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள்தான் என்று கருதுவது சரியல்ல. அதேபோல், ஆசிரியர்களுடைய அமைப்புகளினால்தான் சீர்கேடுகளைக் களைய முடியவில்லை என்று எண்ணுவதும் சரியல்ல.


கவலை தரும் கேள்வி

ஆசிரியர் அமைப்புகளைத் தடை செய்ய வேண்டுமா என்று நீதியரசர் அரசை கேட்டுள்ள கேள்வி, ஆசிரியர் அமைப்பு களுடன் கடந்த 50 வருடங்களாகச் செயல்பட்டுவரும் என்னைக் கவலை கொள்ளவைக்கிறது. நீதிபதி எழுப்பியுள்ள 20 கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அரசைச் சார்ந்தது என்றாலும் அவர் எழுப்பிய 19-வது கேள்வி ஆசிரியர் அமைப்புகளின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கியதால் அதற்கு எதிர்வினையாற்ற வேண்டியது அவசியமாகிறது.

நீதிபதி தனது உத்தரவில் எழுப்பியுள்ள கேள்வி இதுதான்: “காவலர்களைப்போல அரசு ஆசிரியர்கள் சங்கங்களையோ அல்லது அமைப்புகளையோ தொடங்குவதை ஏன் தடைசெய்யக் கூடாது? ஏனென்றால் தவறு செய்யக்கூடிய ஆசிரியர்கள் தங்களுடைய அமைப்புகள் / சங்கங்கள் மூலம் அவர்கள் மீது எடுக்கும் நடவடிக்கைகளைத் தடுப்பதுடன் கல்வி கற்பது அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளதாலும், மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பது ஆசிரியர்கள்தான் என்பதாலும் இத்தேவை எழுகிறது.”

ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கிறார்கள் என்பதும், பள்ளிக் கல்வி என்பது அரசமைப்புச் சட்டத்தின்படி அடிப்படை உரிமையாக்கப்பட்டிருக்கிறது என்பதும் உண்மை. ஆனால், அப்பள்ளிக் கல்வி சீரழிந்துவருவதற்கும், கல்வியின் தரம் குறைந்து வருவதற்குமான ஒட்டுமொத்தப் பொறுப்பையும் ஆசிரியர்கள் தலையில் சுமத்துவது சரியல்ல. இது பிரச்சினைக்குத் தீர்வு காண உதவாது. மேலும் இக்கேள்விக்கான பதிலை அரசிடமிருந்து எதிர்பார்ப்பதும் தவறு. எந்த அரசானாலும் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகச் செயல்பட முடியாது. இந்தக் கேள்விக்கான விடை அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து அதைப் பரிசீலித்த பல உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளிலிருந்தும் பெற முடியும்.

நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டதுபோல் அரசமைப்புச் சட்டத்தின் 21-ஏ என்ற பிரிவில் இந்தியாவிலுள்ள 14 வயது வரை உள்ள குழந்தைகள் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வியை அடிப்படை உரிமையாக்கியுள்ளது. இந்தச் சட்டத்திருத்தம் 2002-ல் கொண்டுவரப்பட்டது. ஆனால், அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்தே 1950 ஜனவரி 26 முதலாகப் பல உரிமைகள் அடிப்படை உரிமைகளாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக 19-வது பிரிவில் சங்கம் அமைக்கும் உரிமையும், அமைதியாக கூடுவதற்கான உரிமையும், பேச்சுரிமையும், கருத்துரிமையும் அடிப்படை உரிமைகளாக்கப்பட்டுள்ளன.

அதேசமயத்தில் ராணுவ வீரர்களுக்கும், பொது அமைதியை நிலைநாட்ட விழையும் படைகளுக்கும் இப்படிப்பட்ட அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்தி அவர்கள் உரிய கடமைகளைப் பணியாற்றும் வண்ணமும், ஒழுக்கத்தை நிலைநாட்டவும் நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம் என்று அதிகாரம் வழங்கியுள்ளது.

இப்பிரிவைப் பயன்படுத்தியே நாடாளுமன்றம் 1966-ம் வருடம் காவல் படையினர் (உரிமைகளைக் கட்டுப்படுத்தும்) சட்டத்தை உருவாக்கியது. 1984-ல் இச்சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. அதன்படி, “காவலர் பணியில் ஈடுபடுபவர்களுக்கு அனைத்து அடிப்படை உரிமைகளும் கிட்டாது” என்று கூறப்பட்டுள்ளது. அதனால் காவலர்கள் சங்கம் அமைப்பது (அ) கூட்டமாகக் கூடி தீர்மானங்கள் இயற்றுவது சட்டப்படி தடுக்கப்பட்டுள்ளது. டெல்லி காவலர் சங்கம் போட்ட வழக்கில் இச்சட்டப் பிரிவுகள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது (1987). வங்கத்தில் இடதுசாரிகள் ஆட்சியின்போது காவலர்களுக்கு சங்கம் அமைக்கும் உரிமை வழங்கியுள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் கடந்த 40 வருடங்களாகத் தொடர்ந்து கோரிக்கை எழுப்பியும் அரசு இதற்கு இசையவில்லை. பாதிக்கப்பட்ட காவலர்கள் போட்ட வழக்குகளையும் மேற்குறிப்பிட்ட சட்டத்தின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தொடர்ந்து தள்ளுபடி செய்துவிட்டது.

சங்கம் அமைக்கும் உரிமை

காவல் படையினரைத் தவிர மற்ற பகுதியினர் சங்கம் அமைக்கும் உரிமையை யாரும் தடைசெய்ய முடியாது. 1926-ம் வருடத்திய தொழிற்சங்கச் சட்டத்தின் கீழ் அனைத்துப் பிரிவினர்களும் தங்களுக்கான தொழிற்சங்கங்களை அமைத்துக்கொள்ளலாம். ஆசிரியர்கள் தொழிலாளர்களாகக் கருதப்பட மாட்டார்கள் என்பதனால் அவர்கள் தங்களது அமைப்புகளைத் தமிழ்நாடு சங்கப் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்திருக்கின்றனர். இது தவிர, அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அரசு ஒழுங்கு விதிமுறையின் கீழ் தங்களது அமைப்புகளை உரிய முறையில் பதிவுசெய்திருக்கின்றனர். ஆசிரியர் பணிகளை அங்கீகரிப்பதுடன் அவர்களுடைய ஆலோசனையைப் பெறும் வகையில் மாநிலங்களிலுள்ள சட்ட மேலவையில் அவர்களுக்கான பிரதிநிதித்துவமும் அரசமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ளது - பிரிவு 171(3) (சி). தமிழ்நாடு சட்ட மேலவையில் - அது உயிருடன் இருந்தவரை - அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் பிரதிநிதிகள் சிறப்பாகப் பணியாற்றியதை மறக்க முடியாது (மாயவன், பார்த்தசாரதி).

ஒருவர் அரசுப் பணியில் இருக்கும்போது அங்குள்ள ஊழியர் அமைப்புகளிலும் பொறுப்புகளில் இருந்துகொண்டு சங்க நடவடிக்கைகளில் ஈடுபடலாமா? அதைப் பற்றி அரசியலமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது? இந்தக் கேள்வி பல முறை நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்டியுள்ளது. 1964-ல் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளடங்கிய அமர்வு வழங்கிய ஒரு சரித்திரப் புகழ் வாய்ந்த தீர்ப்பு “அரசு ஊழியர்களாக இருப்பினும் அவர்களுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பகுதியிலுள்ள அடிப்படை உரிமைகள் பொருந்தும்; அவர்கள் சங்கம் அமைத்துக்கொள்வதோடு தங்களது உரிமைகளுக்காக வேலைநிறுத்தம் தவிர்த்த மற்ற போராட்டங்களில் ஈடுபடலாம்” என்றும் தெளிவாக வழிகாட்டியது. இதைத் தொடர்ந்து, 1966-ல் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் தொடர்ந்த ஒரு வழக்கில் சங்கம் அமைக்கும் உரிமையை அடிப்படை உரிமையாகவும் உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

இப்படிப்பட்ட பின்னணியில் சென்னை உயர் நீதிமன்றம் இப்போது எழுப்பியிருக்கும் கேள்வி வருத்தத்தைத் தருகிறது. சங்கம் என்பது ஜனநாயகத்தின் ஒரு வடிவம். ஏற்கெனவே அரசானது சங்கங்களை நசுக்கத் தருணம் பார்த்திருக்கும் நிலையில், இப்படியான கேள்வி எவ்விதத்தில் நியாயமாகும்? மேலும், காவல் பணியாற்றுவோருடன் ஆசிரியர்கள் போன்ற தரப்பினரை ஒப்பிடுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கே விரோதமானதாக அமைந்துவிடாதா? நீதிபதியின் 19-வது கேள்விக்கான பதில் இதுதான்.

1.ஆசிரியர்களுக்கும் காவல் துறை பணியாற்றுபவர் களுக்கும் உள்ள உரிமைகள் வெவ்வேறு. 2. ஆசிரியர் அமைப்புகளை தமிழக அரசே நினைத் தாலும் தடைசெய்ய முடியாது. 3. மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டிய சமுதாயக் கடமையில் ஆசிரியர்களுக்கும், அவர்களது அமைப்புகளுக்கும் பெரும் பங்குண்டு. ஆகையால், இந்தக் கேள்வியை நீதிமன்றம் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

- கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு), உயர் நீதிமன்றம், சென்னை.

No comments:

Post a Comment


web stats

web stats