தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்ட முறையை பின்பற்றக் கோரிய மனு தொடர்பாக,
தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் சையது அம்மாள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பாபு அப்துல்லா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் தமிழக மாணவர்கள் பின்தங்கினர். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களால் கூட நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை.
இதன் மூலம் மாநில பாடத்திட்ட முறையில் பயின்ற மாணவர்களால் நீட் போன்ற தேசிய அளவிலான தகுதித் தேர்வுகளில் வெற்றி பெற முடியாதா என்ற கேள்வி எழுகிறது. அண்டை மாநிலமான கேரளத்தில் கூட சிபிஎஸ்இ முறையே பின்பற்றப்படுகிறது. அதனால் கேரளத்தைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவிலான தகுதித் தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறுகின்றனர். எனவே தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்ட முறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலர், இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்
No comments:
Post a Comment