ஏடிஎம்-மில் பணம் எடுப்பதற்கான புதிய கட்டணம், குறைந்த பண இருப்பு இல்லாவிட்டால் அபராதம் என எஸ்பிஐ வங்கி கொண்டு
வந்துள்ள மிக முக்கிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.
நீங்கள் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், நிச்சயம் இந்த தகவல்களை அறிந்திருக்க வேண்டும்.
குறைந்த பண இருப்பு
பெரு நகரங்களில் இருக்கும் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தது 5 ஆயிரம் ரூபாயை இருப்பாக வைத்திருக்க வேண்டும். ஊரக, பாதி ஊரக மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் முறையே ரூ.3,000, ரூ.2,000 மற்றும் ரூ.1,000 என இருப்பு வைக்க வேண்டியது அவசியம்.
குறைந்த பண இருப்பு இல்லாவிட்டால்?
எஸ்பிஐயின் மாற்றப்பட்ட கட்டணங்களின் அடிப்படையில், மாதாந்திர வங்கி இருப்பு சராசரித் தொகை குறைந்த இருப்புத் தொகையை விட குறைந்தால், ரூ.100 அபராதமும், சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.
மாநகரங்களில் உள்ள எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் ரூ.5000க்குக் கீழே இருப்பு வைத்தால் ரூ.100ம், 5 ஆயிரத்தில் பாதித் தொகை மட்டுமே இருந்தால் ரூ.50ம் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.
நகர, சிறு நகர, கிராமபுறப் பகுதிகளுக்கு ரூ.20 முதல் 50 வரை அபராதமும் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும். இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு வங்கியில் இருந்து தகவல் அனுப்பப்படும்.
டெபாசிட் செய்யவும் கட்டுப்பாடு
சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் மாதத்துக்கு அதிகபட்சமாக 3 முறை மட்டுமே கட்டணமின்றி பணத்தை டெபாசிட் செய்யலாம். அதற்கு மேல் செய்யும் ஒவ்வொரு டெபாசிட்டுக்கும் ரூ.50 கட்டணமும் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.
ஏடிஎம்மில் பணம் எடுக்க
எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ.10ம், பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.
அதே போல, வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் இருப்பு இருந்தால், அவர்கள் எஸ்பிஐயில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்காது. அதே போல, வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருப்பு வைத்தால், பிற வங்கி ஏடிஎம்களில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் பிடிக்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது.
எஸ்எம்எஸ் சேவைக் கட்டணம்
எஸ்பிஐ வங்கி, வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்எம்எஸ்-களுக்கு காலாண்டுக்கு ஒரு முறை ரூ.15ஐ கட்டணமாக பிடித்தம் செய்கிறது.
எஸ்பிஐயுடன் இணையும் 5 வங்கிகள்
இந்த கட்டணங்கள், எஸ்பிஐ வங்கி மற்றும், அதனுடன் இணையும் ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், திருவாங்கூர், ஹைதராபாத், ஜெய்ப்பூர், பட்டியாலா ஆகிய 5 வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.
No comments:
Post a Comment