தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை உத்தரவுப்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தினந்தோறும் தேர்வுகளை நடத்த ஆகும் நிதிச் செலவுகளை யார் ஏற்பது என்பதில் ஆசிரியர்களிடையே குழப்பம் அதிகரித்து வருகிறது.
அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் 1 முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தினந்தோறும் ஒரு பாடத்துக்கு தேர்வு நடத்த வேண்டும் எனவும், இதற்கான வினாத்தாள் தமிழகம் முழுமைக்கும் சேர்த்து சென்னையில் தயாரிக்கப்பட்டு உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள், குறுவள மையங்கள் மூலமாக பள்ளிகளுக்கு அனுப்பப்படும் எனவும் அண்மையில் தமிழக பள்ளிக் கல்வித் துறையில் அறிவித்துள்ளது.
இந்தத் தேர்வுகள் நவம்பர் 14 முதல் நடத்தப்பட வேண்டும், மாணவர்களுக்கு இத்தேர்வுகளை நடத்தி, அதன் நகலை உயர் அதிகாரிகள் பள்ளியை ஆய்வு செய்யும்போது காண்பிக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து அந்தந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் கடந்த 14-ஆம் தேதி நடத்தப்பட்டது.
அதில், அனைத்து குறுவள மையப் பொறுப்பாளர்களுக்கும் அந்த வாரத்துக்கான வினாத்தாள்கள், ஒரு குறுவள மையத்துக்கு ஒன்று வழங்கப்பட்டு அவற்றை நகல் எடுத்து அவர்களுக்குக் கீழ் உள்ள பள்ளிகளுக்கு அளித்து மாணவர்களுக்கு தனித்தனியாக தேர்வுகளை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
குறுவள மையங்களின் கீழ், பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ள நிலையில், அதன் பொறுப்பாளர்களிடம் வினாத் தாள்களைப் பெற்றுக் கொண்ட தலைமை ஆசிரியர்கள் அதை நகலெடுத்து மாணவர்களுக்கு வழங்க பள்ளியில் 50 மாணவர்கள் எனும் நிலையில் தினமும் இரு பக்கம் கொண்ட அந்த வினாத்தாளை நகலெடுத்து வழங்க ஆகும் செலவை யார் ஏற்பது எனக் கேட்கின்றனர்.
இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
பள்ளியின் கரும்பலகையில் எழுதித் தேர்வுகளை நடத்துங்கள் என கல்வித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஒரு பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள நிலையில், இரு ஆசிரியர்கள் பள்ளிகளில் இரு கரும் பலகைகளில் ஐந்து வகுப்புகளுக்கான வினாக்களை எழுதித் தேர்வு நடத்துவது எப்படி எனக் கேட்கின்றனர். ஒரு சில பள்ளிகளில் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்களை குழுவாக அமரச் செய்து ஒருவரிடம் வினாத்தாளை அளித்து, அதை மற்ற மாணவர்கள் பார்த்து எழுதிக் கொள்ளச் செய்கின்றனர்.
இதனால் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசே வினாத்தாள்களை தயாரித்து வாரந்தோறும் பள்ளிகளுக்கு வழங்கினால் ஆசிரியர்கள், தேர்வுகளை நடத்த எளிதாகும் என்கின்றனர்.
இதுகுறித்து பெற்றோர்கள் தரப்பில் கூறுகையில், இத்திட்டம் அருமையானத் திட்டம் எனவும், தனியார் பள்ளிகளில் நடைபெறும் இதுபோன்ற கற்றல் கற்பித்தல் முறைகளை அரசுப் பள்ளிகளிலும் செயல்படுத்தும் தமிழக அரசின் இத்திட்டம் பாராட்டுக்குரியது எனவும் தெரிவித்தனர்.
எனவே அரசு உயர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து ஆசிரியர்களுக்கான பொருளாதார சுமையைக் குறைத்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
No comments:
Post a Comment