வேடசந்துார்: மத்திய அரசின் வருமான வரித்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவரின் ஓய்வூதியம், தமிழக அரசு வழங்கும் முதியோர் ஓய்வூதியத்தை விட குறைவாக உள்ளது.மதுரையில், மத்திய அரசின் வருமான வரித்துறை அலுவலகத்தில், பெண் ஊழியர் ஒருவர் 1990ல் தினக்கூலியாக சேர்ந்தார்; 1993ல் பகுதிநேர பணியாளராக நியமிக்கப்பட்டார்.
பின், 2008 ல் பணி நிரந்தரம் செய்யப்பட்டு, 2015 மே மாதம் ஓய்வு பெற்றார். அப்போது, அவரது பணப்பலனில் 60 சதவீதம் வழங்கப்பட்டது. மீத தொகையை (ரூ.ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 33) ஓய்வூதியத்திற்காக எல்.ஐ.சி., 'ஜீவன் அக் ஷயா -6' திட்டத்தில் டிபாசிட் செய்யப்பட்டது. இதையடுத்து, எல்.ஐ.சி., சார்பில் அந்த ஊழியருக்கு பத்திரம் கொடுத்துள்ளனர். அதில், 'டிபாசிட் செய்யப்பட்ட பணத்திற்கு மாத ஓய்வூதியமாக ரூ.770 வழங்கப்படும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியம் பெறும் ஆதரவற்றவர்களுக்கு, மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது; ஆனால், மத்திய அரசின் வருமான வரித்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியருக்கு, மாத ஓய்வூதியம் ரூ.770 தான் கிடைக்கிறது.
திண்டுக்கல்லை சேர்ந்த ஏங்கல்ஸ் கூறியதாவது: மத்திய அரசில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்து, ஒரு லட்சத்து 33 ஆயிரத்தை டிபாசிட் செய்தவருக்கு, மாதம் ரூ.770 தான் என்பது வேதனைக்கு உரியது. இந்தத் தொகையும், 20 ஆண்டுகள் ஆனாலும் உயரப்போவது இல்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment