அன்னை தெரேசாவுக்கு செப்டம்பர் 4-ம் தேதி புனிதர் பட்டம் வழங்கப்படும் என போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளார்.
அன்னை என்ற வார்த்தைக்கு இலக்கணமாக இன்றைக்கும் திகழ்ந்து வருபவர், அன்னை தெரேசா. ஏழை எளியோருக்காக உழைப்பதையே தன் வாழ்வின் மிகப்பெரிய கடமையாகவும், லட்சியமாகவும் கருதியவர். அன்னை தெரேசா, மேற்கு வங்காளத்தை சேர்ந்த மோனிகா பெஸ்ரா என்ற பெண்ணின் வயிற்று புற்றுநோயை 2002–ம் ஆண்டு குணப்படுத்தி அற்புதம் செய்தார். இதற்காக அவருக்கு 2003–ம் ஆண்டு, போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பால் முக்திப்பேறு வழங்கினார்.
முக்திப்பேறுக்கு அடுத்த நிலை, புனிதர் பட்டம். புனிதர் பட்டம் பெற வேண்டுமானால் இரண்டாவது அற்புதம் நிகழ வேண்டும்.
இந்த நிலையில், பிரேசிலை சேர்ந்த ஒரு ஆண் மூளை கட்டிகளால் அவதியுற்றபோது, அவரது உறவினர்கள் அன்னை தெரேசாவை பிரார்த்தித்தனர். அதில் அவர் அற்புதமாக குணம் அடைந்தார்.
இதை போப் ஆண்டவர் பிரான்சிஸ், அங்கீகரித்துள்ளார். இரண்டாவது அற்புதத்தையும் அன்னை தெரேசா செய்துள்ள நிலையில், அவருக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கு போப் ஆண்டவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்புதல் வழங்கினார். ஆனால் புனிதர் பட்டம் வழங்கும் தேதி குறித்து அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், செப்டம்பர் மாதம் 4-ம் தேதி நடைபெறும் விழாவில் அன்னை தெரேசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் என போப் ஆண்டவர் பிரான்சிஸ் இன்று அறிவித்துள்ளார். ஆனால் விழா இந்தியாவில் நடைபெறுமா அல்லது ரோமில் நடக்குமா என்பது அறிவிக்கப்படவில்லை.
தெரேசாவுக்கு முக்திப்பேறு வழங்கியபோது, அந்த நிகழ்ச்சியை காண்பதற்காக இந்தியாவில் இருந்து 3 லட்சம் கிறிஸ்தவர்கள் ரோம் சென்றது குறிப்பிடத்தக்கது.
1910–ம் ஆண்டு அல்பேனியாவில் பிறந்த அன்னை தெரேசா, இந்தியாவை தனது இரண்டாவது தாயகமாக ஏற்றுக்கொண்டு, கொல்கத்தாவில் அறப்பணிகள் செய்தார். 1951–ம் ஆண்டு அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. தனது சமூக சேவைகளால் மக்கள் மனங்களில் அவர் இமயமாக உயர்ந்தார். அவருக்கு 1979ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்திய அரசு 1980–ம் ஆண்டு நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கி சிறப்பு செய்தது.
அன்னை தெரேசா, தனது 87–வது வயதில் 1997–ம் ஆண்டு செப்டம்பர் 5–ந்தேதி மரணம் அடைந்தார். அரசு மரியாதையுடன் அவரது உடல் கொல்கத்தாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.