பிளஸ் 2 வேதியியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகவில்லையென பள்ளிக் கல்வித்துறை மறுப்புத் தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பிளஸ் 2 தேர்வு கடந்த 5-ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில், கடந்த 14-ஆம் தேதி வேதியியல், கணக்கு பதிவியல் தேர்வு நடைபெற்றது. மேலும், அந்தப் பாடங்களுக்கான வினாத்தாள்கள் உரிய வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் இருந்து காவல் துறை
பாதுகாப்புடன்
வாகனத்தில் உரிய வழித்தடம் வழியாக கொண்டு சென்று தேர்வு மையங்களில் விநியோகம் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஏற்கெனவே சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்ட அலுவலர், ஆய்வு அலுவலர்கள் ஆகியோரிடமிருந்து ஆதாரப் பூர்வமான அறிக்கையும் பெறப்பட்டுள்ளன.
இந்த நிலையில் 15-ஆம் தேதி ஒரு நாளிதழில் பிளஸ் 2 வேதியியல் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக செய்தி வெளியானது. இது மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் அச்சப்படும் வகையில் உள்ளது.
ஏற்கெனவே சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் இத்தகவல் உண்மைக்குப் புறம்பானது எனவும் தெரிவித்துள்ளார். அதனால், இத்தகவல் முற்றிலும் தவறானது என்பதால் பொதுமக்கள், மாணவர்கள் அந்தச் செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.