சென்னையில் 'டெங்கு, மலேரியா, டைபாய்டு' போன்ற காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், நகரில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளை கண்காணிக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த சில வாரங்களாக, பல்வேறு இடங்களில் மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. தற்போது பருவமழை காலம் துவங்க உள்ளதால், 'டெங்கு, மலேரியா' காய்ச்சல் பாதிப்புகள் பரவும் நிலை காணப்படுகிறது. குறிப்பாக, கொசுக்கள் மூலம் பரவும் இந்த காய்ச்சல் பாதிப்புகளால், பள்ளி மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதை தவிர்க்க, சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளையும் சுகாதார துறை அதிகாரிகள் கண்காணிக்க, மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.மாநகராட்சி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சுகாதார துறை ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் நேரடியாக சென்று, குப்பை, கழிவுநீர் ஆகியவை பள்ளி வளாகத்தில் தேங்கி கிடக்கின்றனவா என, ஆய்வு செய்ய வேண்டும்.
குடிநீர் தொட்டி மூடி வைக்கப்பட்டுள்ளதா, பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கும் வகையில் ஏதேனும் பொருட்கள் உள்ளதா என, கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு ஆய்வு அறிக்கை தயாரித்து மாநகராட்சிக்கு வழங்க வேண்டும்.மாணவர்களில் யாராவது காய்ச்சல் பாதிப்பிற்கு ஆளாகி இருந்தால், அதுகுறித்து, அந்த மண்டல சுகாதார அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.உடனடியாக அந்த மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்படும். தனியார் பள்ளிகளில் காய்ச்சல் பாதிப்பு இருந்தால், மாணவர்களை பள்ளியில் வைத்திருக்காமல், வீட்டிற்கு அனுப்ப பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை உடனடியாக துவங்க மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment