Thursday, 9 October 2014

அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் இருக்கும்போது இறந்தால் 10 லட்சம் நிவாரண உதவி

தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்கள் இறந்தால், ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிக்கான சிறப்பு முகாம் வருகிற 15ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை நடைபெறும். இந்த முகாமில், 2015ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயது நிறைவடைந்தவர்கள் புதிய வாக்காளர்களாக தங்கள் பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம். அதேபோன்று, இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், பெயர் நீக்கம், திருத்தம், இருப்பிடத்தை மாற்றுவதற்கும் விண்ணப்பிக்கலாம். புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்பவர்களுக்கு தேசிய வாக்காளர் தினமான ஜனவரி மாதம் 25ம் தேதி வண்ண அடையாள அட்டை வழங்கப்படும். முன்னதாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் வருகிற 13ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட 9 கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்கள் கருத்தை தெரிவிப்பார்கள். அங்கீகரிக்கப்படாத கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க முடியாது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 3,700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 500 வழக்குகள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் 300 வழக்குகள் கைவிடப்பட்டது. 500 வழக்குகள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் பணியில் மத்திய-மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளூர் போலீசார், வெளி மாநில போலீசார், துணை ராணுவம், தனியார் வீடியோ கேமராமேன் என சுமார் 3 லட்சம் பேர் வரை பணியாற்றுவார்கள்.

தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் மற்றும் விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தால் அல்லது மாரடைப்பு போன்ற உடல்நலக்குறைவு காரணமாக இறந்தால் தேர்தல் ஆணையம் சார்பில் இதுவரை ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது. இந்த உதவித்தொகையை தேர்தல் ஆணையம் 2014ம் ஆண்டு முதல் ரூ.10 லட்சமாக உயர்த்தி உள்ளது. அதன்படி, கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் பணியில் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats