பள்ளிகள் இன்று இயங்க அரசு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யவேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுக்கள் நீதிபதிகள் வைத்தியநாதன், மகாதேவன் ஆகியோர் முன் நேற்று மாலை 6 மணிக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது திமுக சார்பாக மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, நீதித்துறைக்கும் நீதிபதிக்கு எதிராகவும் போராட்டத்தை அதிமுகவினர் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். பள்ளிகளை மூட அரசுக்கு மட்டும் அதிகாரம் உள்ளது. அரசு மவுனம் காக்கிறது. நீதிமன்றம் தலையிட்டு பள்ளிகளை திறக்க உத்தரவிட வேண்டும் என்றார்.
உடனே அரசு பிளீடர் எஸ்.டி.எஸ். மூர்த்தி ஆஜராகி, ‘‘பள்ளிகள் வழக்கம் போல செயல்படும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்’’ என்றார்.
பொறியியல் கல்லூரிகள் சார்பாக வக்கீல் கந்தன் துரைசாமி ஆஜராகி, ‘கல்லூரிகள் திறக்கப்படும். ஏற்கனவே வெளியிட்ட, கல்லூரிகள் மூடப்படும் என்கிற அறிவிப்பை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்’ என்றார். பின்னர் வக்கீல்கள் எத்திராஜலு, கே.பாலு, ஜோதிமணி, மோகன், ஆகியோர் ஆஜராகி, பள்ளிகள் மூடினால் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர். இரு தரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதிகள், ‘‘அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் நீதிமன்றத்தில் பள்ளிகள் நாளை திறக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும், பள்ளிகள் செல்லும் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பள்ளிகள், கல்லூரிகள் தரப்பில் பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் என்ற அறிவிப்பை வாபஸ் பெறுகிறோம் என்று அறிவிப்பு டிவி, பத்திரிகைகளில் ஒலிபரப்பப்பட்டுள்ளது என்றும் கூறியதை நீதிமன்றம் பதிவு செய்துகொள்கிறது. இருந்தாலும் சம்பந்தப்பட்ட சங்கங்கள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பள்ளிகள் நாளை செயல்பட வேண்டும். இந்த வழக்கு விசாரணை 8ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அன்றைக்கு அரசு விரிவாக பதில் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கில் திமுக சார்பாக சட்டத்துறை இணை செயலாளர் கிரிராஜன், திமுக வக்கீல்கள் தேவராஜ், பரந்தாமன், நீலகண்டன், கணேசன் ,அருண் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.
இரவு வரை செயல்பட்ட ஐகோர்ட்
பள்ளிகள் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியானதும் இதை எதிர்த்து அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அனுமதி கேட்ட தலைமை நீதிபதி கவுல் வீட்டிற்கு நேற்று காலை முதலில் வக்கீல்கள் கே.பாலு, ஜோதிமணி ஆகியோரை சந்தித்து முறையீடு செய்தனர். பின்னர் வக்கீல்கள் வைகை , மோகன், மில்டன், பொற்கொடி, பார்த்தசாரதி ஆகியோர் தலைமை நீதிபதியிடம் முறையிட்டனர். இதை கேட்ட தலைமை நீதிபதி விடுமுறைக்கால நீதிபதிகள் வழக்கை விசாரிக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து நேற்று இந்த வழக்கு மாலை 5 மணிக்கு விசாரணை எடுத்து கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இரவு 6 மணிக்கு எடுத்து விசாரிக்கப்பட்டது. இதில் பதில் அளிக்க அரசு வக்கீலுக்கு 20 நிமிடம் அவகாசம் தரப்பட்டது. பின்னர் அரசு உத்தரவாதம் அளித்தது. இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர். இந்த வழக்கில் நேற்று காலை முதல் இரவு 7,30 மணி வரை பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment