Tuesday, 14 October 2014

புதிய விவரங்கள் கேட்கப்படுவதால் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதில் மேலும் தாமதம்

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான தகவல் திரட்டும் பணியில், மாணவர்களின் இ - மெயில் முகவரி, எடை, உயரம் போன்ற புது விவரங்களை சேர்க்க, கல்வித்துறை நிபந்தனை விதித்துள்ளதால், நடப்பு கல்வியாண்டில் ஸ்மார்ட் கார்டு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முதல் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பள்ளியில் படிக்கும் மாணவர்களின் முழு தகவல்களுடன் அடங்கிய ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான பணி, கடந்த 2012ம் ஆண்டில் துவங்கியது.

தொய்வு: பெரும்பாலான பள்ளிகளில், கணினி இல்லாததாலும், கணினி உள்ள பள்ளிகளில் இணையதள இணைப்பு இல்லாததாலும், மாணவர்கள் குறித்த தகவல்களை பதிவேற்றம் செய்வதில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஜனவரி மாதம், மாவட்டத்தில், திருத்தணி, பொன்னேரி, திருவள்ளூர் ஆகிய இடங்களில், தனியார் கல்லுாரி கணினி ஆய்வகங்களில், பள்ளி கணினி ஆசிரியர்களை கொண்டு சிறப்பு முகாம் நடத்தி, மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன.
இதிலும், முழுமையான தகவல்களை பதிவேற்றம் செய்ய முடியாததால், ஆப் -லைன் மென்பொருள் குறுவட்டில் பதியப்பட்டு, மாணவர்களின் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன.
இ-மெயில் முகவரி: இருப்பினும், மாணவர்களுக்கு இதுவரை, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவில்லை. தற்போது, கூடுதலாக, மாணவர்கள் உடல் எடை, உயரம் மற்றும் இ -மெயில் முகவரி போன்ற விவரங்களை பதிய வேண்டும் என, கல்வித்துறை புது உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில், மாணவர்கள் எடை கணக்கிடப்படுவதில் எவ்வித சிக்கலும் இல்லை.
ஆனால், மாணவர்களுக்கு இ-மெயில் முகவரி உருவாக்குவதில், இழுபறி நிலவுகிறது. மாணவர்களுக்கு இணைய இணைப்பு முகவரி உருவாக்க, சொந்தமாக கணினி, இணைய இணைப்பு இருக்க வேண்டும்; அல்லது உள்ளூரில் உள்ள தனியார், பிரவுசிங் மையங்களுக்கு சென்று உருவாக்க வேண்டும். இதற்கு காலதாமதமும், பண விரயமும் ஏற்படும்.
ஏற்கனவே விவரம் அளித்த பிளஸ் 2 மாணவர்கள், பள்ளி படிப்பை முடித்து வெளியேறிய நிலையில், நடப்பு ஆண்டிலாவது, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாணவர்களின் முழுமையான விவரங்கள் அடங்கிய ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில், அனைத்து விவரங்களும் தயாரிக்கப்படுகின்றன. அதனால்தான் கூடுதல் விவரங்கள் பெறப்பட்டு வருகின்றன" என்றார்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats