சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கான ஒதுக்கீட்டை, மருத்துவப் படிப்புக்கான விளக்க குறிப்பேட்டில் இருந்து நீக்க வேண்டும் என, மாநில சுகாதாரத் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவைச் சேர்ந்த, வி.ஜி.சுப்ரமணியன் தாக்கல் செய்த மனு: என் தந்தை கணேசன், சுதந்திரப் போராட்ட வீரர். என் மகள் பிரியா, பிளஸ் 2வில், 1,159 மதிப்பெண் பெற்றார். எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு விண்ணப்பித்தார்.
பரிசீலிக்கவில்லை: சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு, மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டன. என் மகளின் விண்ணப்பத்தை, தியாகிகளின் வாரிசுகளுக்கான ஒதுக்கீட்டின்படி பரிசீலிக்கவில்லை. தியாகிகளின் மகன், மகளுக்கு மட்டுமே இடம் ஒதுக்க முடியும் என்றும், பேரன், பேத்திகளுக்கு தகுதியில்லை எனவும் கூறப்பட்டது.
அப்படி பார்த்தால், இந்த ஒதுக்கீட்டின் கீழ், யாருக்கும் இடம் கிடைக்காது. தியாகிகளின் மகன், மகள், இப்போதைய தேதியில், 50 வயதை தாண்டியிருப்பர். புதுச்சேரி மருத்துவ பல்கலைக்கழகம், தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில், தியாகிகளின் பேரன், பேத்திகளுக்கும் இடஒதுக்கீடு உள்ளது.
எனவே, என் மகளுக்கும் எம்.பி.பி.எஸ்., படிப்பில், இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. அரசு தரப்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி தாக்கல் செய்த பதில் மனுவில், 15 ஆண்டுகளாக, சுதந்திரப் போராட்ட வீரர்களின் குழந்தைகளுக்கான ஒதுக்கீட்டின் கீழ், யாரும் சேர்க்கப்படவில்லை. ஆண்டுதோறும், தியாகிகளின் பேரன், பேத்திகள்தான் விண்ணப்பிக்கின்றனர். அவர்களுக்கு தகுதி இல்லாததால், அவற்றை பரிசீலிப்பதில்லை என தெரிவிக்கப்பட்டது.
மனுவை விசாரித்த, நீதிபதி ராமசுப்ரமணியன் பிறப்பித்த உத்தரவு: தகுதியானவர்கள் வராததால் 15 ஆண்டுகளாக, தியாகிகளின் குழந்தைகளுக்கான ஒதுக்கீட்டை நிரப்ப முடியவில்லை என அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டு உள்ளது. அப்படி இருக்கும்போது, பேப்பர் அளவில், எதற்காக இந்த இடஒதுக்கீடு தொடர வேண்டும் என தெரியவில்லை.
அரசு கூறுவது சரியே: கடந்த 15 ஆண்டுகளாக, இந்த ஒதுக்கீட்டின் கீழ் யாரும் வராதபோது இனிமேலும் அவர்கள் கிடைக்கப் போவதில்லை. எனவே, வரும் காலங்களில், மருத்துவப் படிப்புக்கான விளக்க குறிப்பேட்டில் இந்த ஒதுக்கீட்டு பிரிவை நீக்க வேண்டும்.
தியாகிகளின் வாரிசுகளுக்கான ஒதுக்கீடு, சிறப்பு பிரிவாக உருவாக்கப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டு உள்ள உத்தரவாதத்தின்படி இந்த ஒதுக்கீடு வரவில்லை. அரசின் கொள்கை அடிப்படையில், இந்த ஒதுக்கீடு உருவாக்கப்பட்டது. இத்தகைய உரிமையை, நிரந்தரமாக நீடிக்க முடியாது.
எனவே தியாகிகளின் பேரன், பேத்திகளுக்கு, இடஒதுக்கீடு வழங்க முடியாது என அரசு கூறுவது சரியே. அதில் குற்றம் காண முடியாது. ஆகையால், எதிர்காலங்களில் குழப்பத்தை தவிர்க்க, தியாகிகளின் வாரிசுகளுக்கான ஒதுக்கீட்டை, விளக்க குறிப்பேட்டில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி ராமசுப்ரமணியன் உத்தரவிட்டு உள்ளார்.
No comments:
Post a Comment